பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல் Jeffersonville, Indiana, USA 64-0719E 1சற்று நேரம் நின்ற வண்ணமாகவே இருப்போம். அருமை தேவனே, தேவனுடைய வீட்டில் நின்று கொண்டு, ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கக் கிடைக்கப் பெற்ற இன்னுமொரு சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இத்தேசத்தில் இன்னும் இந்த சிலாக்கியம் எங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் மிக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆண்டவரே, நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து இங்கு வந்துள்ள அநேக மக்களுக்காக இப்போது நன்றி செலுத்துகிறோம். இவர்களில் சிலர் இன்றிரவே நெடுஞ்சாலைகளில் பயணம் செய்து போக வேண்டியவர்களாயுள்ளனர். தேவனே, அவர்களுடன் கூட நீர் இருந்து, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை வழி நடத்த வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். உஷ்ணத்தை தற்காலிகமாய் தணிக்க உதவி செய்த சிறு மழைக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். பிதாவே, இன்றிரவு உமது வார்த்தையில் எங்களைச் சந்திக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். ஆண்டவரே, அதற்காகவே நாங்கள் இங்கு கூடி வந்துள்ளோம். எங்கள் கூடி வருதல் உமது ராஜ்யத்துக்கு உபயோகமாக இருக்க உதவி செய்யும். நாங்கள் மற்றவர்க்குப் பிரயோஜனமாக இருக்க எங்களுக்கு உதவி புரியும். இவை யாவற்றையும் எங்களுக்கு அருள்வீராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 2அங்கு சில இரகசிய பேட்டிகள் உண்டாயிருந்தன. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பில்லி அவைகளில் ஒரு பெரிய சுமையையே எனக்குக் கொடுத்ததனால், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இன்று மாலை நான் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு தங்க வேண்டுமென்று நீங்கள் எடுக்கும் பிரயாசங்களை தேவன் ஆசீர்வதிக்க வேண்டுமென நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு காலை நான் மறுபடியும் கூட்டம் நடத்துவேன். இதைக் குறித்து நான் போதகரிடத்தில் பேசினபோது, அவர் சரியென்று சம்மதம் தெரிவித்தார். 3இங்கு வந்துள்ள ஒவ்வொரு ஆப்த நண்பரையும் அடையாளம் கண்டு அளவளாவ நேரமிருந்தால் நலமாயிருக்கும். ஆனால், நீங்கள் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் இங்கு உஷ்ணமாயுள்ளது. எனவே அதை தவிர்த்து விட்டு, ''கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியுமா? “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுவதைக் காட்டிலும், மற்றவர் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் மற்றொரு பெரிய செயல் இல்லவே இல்லையெனலாம். அவர் அவ்விதம் செய்வாரானால், அதுவே எனக்கு அவசியமாயுள்ளது - அது மாத்திரமே. “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்” என்பதே மொழியில் காணப்படும் மிகப்பெரிய சொற்களாம். அவர் ஆசீர்வதிக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். 4என் மனைவியிடம் சில நிமிடங்களுக்கு முன்பாக நான் கூறினது போன்று நான் குளித்துவிட்டு ஈரத்தைத் துடைப்பேன். ஆனால் என்னால் முழுவதும் உலர முடியவில்லை. நான் மறுபடியும் (வியர்வையினால்) ஈரமாகிறேன். நான் மீண்டும் துடைப்பேன். என் உடையைப் போட்டுக்கொள்ளவும் முடியவில்லை. டூசான் இதினின்றும் வித்தியாசப்பட்டது. இவ்விடத்தைக் காட்டிலும் அங்கு இரு மடங்கு உஷ்ணம் அதிகமாயிருந்தாலும், இவ்வளவாக அங்கு வியர்க்காது. அங்கு காற்றில் ஈரப்பசை இல்லாததனால், நீங்கள் வெளியே வந்தவுடன் உலர்ந்து விடுகின்றீர்கள். அங்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருந்தால், அது உடனே உலர்ந்து விடுகின்றது. அங்கு உங்களுக்கு வியர்வை தோன்றாது. ஏனெனில் உங்களுக்கு வியர்வை ஆரம்பிப்பதற்கு முன்னமே அது உலர்ந்து விடுகின்றது. உங்களுக்கு அங்கு வியர்வை உண்டாகின்றது. அதை நீங்கள் காண்பதில்லை. ஆனால் இங்கேயோ உலர்வதற்கு அரும்பாடு பட வேண்டியுள்ளது இப்பொழுது நான் வியர்வையினால் முழுவதுமாக நனைந்திருக்கிறேன். அந்த அறையில் நான் இருந்தேன். அங்கு அவசர நிலையில் ஏழு அல்லது எட்டு பேர் இருந்தனர். அவர்களை உடனடியாகக் காண வேண்டுமெனும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. 5நீங்கள் தங்கியிருந்து மறுபடியுமாக மாலை வரவேண்டுமென்று உங்களை நான் கேட்டுக் கொள்ளும் காரணம், அது நம்மெல்லாருக்கும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே. நண்பர்களே, நானோவென்றால் அவ்விதம் செய்ய மாட்டேன். நான் கூறுவதைக் கேட்க நீங்கள் அவ்விதம் செய்வதைக் குறித்து, உங்களை மேன்மையாக எண்ணுகிறேன் - நான் அவ்விதம் செய்யமாட்டேன். நான் உங்களை நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள் என்பதை நானறிவேன். அது எனக்குத் தெரியும். இல்லையெனில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இக்காரியங்களைச் செய்யமாட்டீர்கள். உங்களைக் குறித்து மேன்மையாக நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நான் எண்ணாமலிருந்தால், இந்த உஷ்ணத்தில் உங்களை அமரச் செய்திருக்க மாட்டேன். 6இங்கு வருவதற்கு முன்பாக, தேவனுடைய சமூகத்தில் சில வேதவாக்கியங்களை தேர்ந்தெடுத்து, அவருடைய ஒத்தாசையைக் கோரி, “தேவனாகிய கர்த்தாவே, எப்படியாகிலும் உதவி செய்து, அந்த அருமை மக்களுக்கு உம்மாலியன்றது அனைத்தும் அருள வேண்டும்” என்று ஜெபித்துவிட்டு, புறப்பட்டு வருகிறேன். சதாகாலமும் நான் உங்களுடன் வாழுவேன் என்று எதிர்பார்த்து, அதை உறுதியாக நம்புகிறேன். நாம் இவ்விதம் ஒன்று கூடி இங்கு நின்று கொண்டிருப்பது ஒரு குறுகிய காலம் மாத்திரமே. ஏனெனில், நாம் நித்தியத்தை ஒன்றாகக் கழிக்கப் போகின்றோம். பாருங்கள்? அதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நான் ஏதாகிலும் தவறுரைத்தால், அதை வேண்டுமென்று செய்யாமல், அறியாமையினால் செய்கிறேன் என்பதை பரம பிதா அறிவார். 7எனவே, நீங்கள் என்னுடைய உத்தரவாதிகள் என்றும், சுவிசேஷத்தின் மூலமாய் என் கைகளில் நீங்கள் அருளப்பட்டிருக்கிறீர்கள் என்றும் அறிந்தவனாய், வேதவாக்கியங்களுடன் சரியாய் உங்களை ஒன்றுபடுத்த விரும்புகிறேன்... அனேக முறை மக்கள் என்னிடம் வந்து, “சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அங்கு வந்து, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று வியாதியாயிருக்கும் என் குழந்தைக்கு கூறுவீர்களானால், அது சுகம் பெறும். அதை மாத்திரம் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்” என்கின்றனர். அதுமிகவும் விசுவாசமுள்ளதாயும், அருமையாகவும் தென்படுகின்றது. அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் முதலாவதாக, அவ்விதம் செய்ய அவர் என்னிடம் கூறினாலன்றி, என்னால் செய்ய முடியாது. பாருங்கள்? வேண்டுமானால், அந்த குழந்தைக்கு நான் ஜெபம் செய்யலாம், என்னால் இயன்றதைச் செய்யலாம். ஆனால்... நான் ஆர்வம் கொண்டு அவ்விதம் கூறினால் என்னவாகும்? நான் ஆர்வம் கொண்டு, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறினால், உண்மையாக, “என் ஆர்வம் உரைக்கிறதாவது” என்பதாகவே அது அமைந்திருக்கலாம். பாருங்கள், பாருங்கள்? அது நிறைவேறலாம், அல்லது நிறைவேறாமல் போகலாம். அந்த நபர் என் ஆர்வத்தில் நம்பிக்கை கொண்டிருந்து, அது நிறைவேறாமல் போனால் அவருக்கு எப்படியிருக்கும்? ஒருக்கால் அவர் மரணத்துக்கும் ஜீவனுக்கு மிடையே ஊசலாடிக் கொண்டிருக்கலாம். அப்படியானால் அவருடைய நம்பிக்கை என்னவாகும்? நான் உண்மையாகவே, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறும்போது நான் ஆர்வத்தினால் கூறுகிறேன் என்று அவர் நினைக்க வழியுண்டு அல்லவா? எனவே நான் அவ்விதம் கூறும்போது, எனக்குத் தெரிந்த மட்டில் அது சரியென்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். இப்பொழுது தேவன் என்னுடன் பேசி எனக்குக் காண்பித்தவைகளை, நான் அவ்விதமே எடுத்துக் கூற முடியும். அது நல்லதாயிருந்தாலும், தீமையாயிருந்தாலும் நான் அதைக் கூறியே ஆக வேண்டும். சில சமயங்களில், தீமைகளை மக்களுக்குக் கூறுவது இனிமையாயிராது, ஆயினும், நல்ல காரியங்களை மக்களுக்குக் கூறுவதில் நான் எவ்வளவு கடமைப்பட்டுள்ளேனோ, அவ்வளவாக மனிதருக்கு நேரிடவிருக்கும் தீமையான காரியங்களை எடுத்துரைப்பதிலும் நான் கடமைப்பட்டுள்ளேன். என்னவாயினும், நமக்கு கர்த்தருடைய சித்தமே அவசியமாயுள்ளது. சில நேரங்களில் தேவனுடைய சித்தம் நம் விருப்பங்களுக்கு மாறாக அமைந்துள்ளது. ஆயினும், நமக்கு தேவனுடைய சித்தம் மாத்திரமே அவசியமாயிருக்குமானால், நமக்கு தீமை நேரிடுவது தேவனுடைய சித்தமாயுள்ளது என்பதை அறிந்து கொள்வதும் நலமாயிருக்கும். அது நன்மையானாலும் தீமையானாலும், தேவனுடைய சித்தம் நிறைவேறுவதையே நாம் விரும்புகிறோம் அவ்விதமாகவே நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். 8இங்குள்ள சகோதரர்கள் ஞாயிறு இரவன்று இருபது அல்லது முப்பது நிமிடங்களுக்கு செய்தியைக் கேட்பது வழக்கம். என்னால் அவ்விதம் செய்ய முடியுமோ என்னவோ என்று எனக்குத் தெரியவில்லை - கூடுமானவரை நான் செய்ய முற்படுவேன். இதற்கு பின்பு உடனடியாக ஞானஸ்நான ஆராதனை ஒன்றுண்டு என்று நினைக்கிறேன். இன்று காலை, அநேகர் கொண்ட ஒரு கூட்டத்திற்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். இங்கு எப்பொழுதும் ஞானஸ்நானம் நடந்து கொண்டேயிருக்கிறது. போதகர்கள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், தேவ சபையினர், லூத்தரன்கள் - எந்த குழுவைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் - இங்கு வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கின்றனர். தேவனுடைய சமுகத்தில் நியாயத்தீர்ப்புக்காக நான் நிற்க வேண்டிய சமயத்தில், இதற்கு நான் பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இதைக் குறித்து நான் எவ்வளவு உறுதி கொண்டவனாயிருக்கின்றேனோ, அவ்வளவு தெளிவாக என் வாழ்க்கையிலுள்ள மற்ற காரியங்களில் நான் இருந்திருப்பேனானால், இப்பொழுதே நான் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமுள்ளவனாய் இருந்திருப்பேன். அந்த ஞானஸ்நான முறைமை சுவிசேஷத்தின்படி உண்மையென்று நான் அறிவேன். பாருங்கள்? அது முற்றிலும் உண்மை. 9இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமேயல்லாமல், வேறெந்த முறையில் எவரும் ஞானஸ்நானம் பெற்றதாக வேத வாக்கியம் எதுவுமில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் கட்டளை- ''நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்னும் கட்டளை - பட்டப் பெயர்களை, அப்பொழுது உச்சரியுங்கள் என்னும் அர்த்தத்தில் அளிக்கப்படவில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கொடுங்கள் என்பதாகத்தான் அது அளிக்கப்பட்டது. வேதத்தில் காணப்படும் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பெற்றனர். வேதத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலும் அல்லது ஒரு வார்த்தையை கூட்டினாலும் அவர்களுக்கு ஐயோ என்று வேதம் கூறுகின்றது. எனவே இந்த விவகாரத்தில் நான் மிகவும் ஐயம் கொண்டிருக்கிறேன். அநேக சமயங்களில் அது என்னை கஷ்டத்தில் ஆழத்தியுள்ளது. எனவே, அதில் நிலை கொள்வதிலேயே நான் விருப்பம் கொண்டுள்ளேன். இதற்கு தேவனே சாட்சி. அநேக நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்து செல்ல இது காரணமாயிருந்தது. இதன் விளைவாக அவர்கள் என்னை விட்டுப் பிரிந்து சென்றனர். ஆனால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் மகத்தான நண்பர் என்னிடம் இருக்கும் வரைக்கும்... அவரே வார்த்தை. பாதை எவ்வளவு கரடுமுரடாக இருந்த போதிலும், வழி கடினமாக இருந்தாலும், அவரும் அந்த வழியாகத்தான் வந்தார். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் சீஷர்களை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? 10கர்த்தர் உங்களனைவரோடும் கூட இருந்து, இந்த வாரம் பூராவும் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்காக நான் தேவனிடத்தில் ஜெபித்துக் கேட்கும் மேன்மையானவைகளை உங்களுக்குத் தந்தருள்வாராக என்பதே என் விண்ணப்பமாயுள்ளது. இப்பொழுது நாம் விலையுயர்ந்த தேவனுடைய வார்த்தையை படிக்கப் போகின்றோம். ஞாபகமிருக்கட்டும். புதன் இரவு... (சகோ. பிரன்ஹாம் ஆராதனைகளைக் குறித்து சகோ. நெவிலுடன் பேசுகின்றார்). திங்கள், செவ்வாய் இரவில் குடும்ப ஜெபம் இருக்கும். ஜனங்கள் இதை அறிவார்களென்று நம்புகிறேன். 11சகோ. ஜுனியர் ஜாக்ஸன் கட்டிடத்தில் இருக்கின்றாரா? சகோ. ஜாக்ஸன்? அவரைக் காணவில்லையே? இதோ இங்கிருக்கிறார், மற்றொரு சகோ. ஜாக்ஸன்... சகோ. டான் ரட்டல், இன்றிரவு இங்கிருக்கின்றாரா? சகோ. டான்? அங்கிருக்கின்றார். இன்றும் அனேக சகோதரர்கள்... ஆர்கன்ஸாஸ், லூயிசியானா, இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சகோதரர் வந்துள்ளதைக் காண்கிறேன். இன்றிரவு சில வயோதிப சகோதரர்களும் இங்கு வந்துள்ளனர். வலது பக்கத்தில் சகோ. தாமஸ் கிட் அமர்ந்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் அவருக்கு 84 வயது பூர்த்தியாகும். மூன்று நான்கு ஆண்டுகட்கு முன்னர் அவருக்குப் பிருக்கக் கோளாறின் காரணமாக இரணச் சிகிச்சை செய்யப்பட்டு, புற்று வியாதியினால் மரணத்தருவாயிலிருந்தார். அவர் மரித்துப் போவாரென்று மருத்துவர் எண்ணி, அவரைப் படுக்கையில் அப்படியே விட்டுவிட்டார். அவரை ஓஹையோவில் சந்திக்க எண்ணி, எனது பழைய காரை ஓட்டிக் கொண்டு சென்றேன். கர்த்தராகிய இயேசு அவருக்குப் பரிபூரண சுகத்தையளித்தார். இன்றிரவு அவரும் அவருடைய துணைவியாரும் இங்கு வந்துள்ளனர்... உங்களில் அநேகருக்கு அவர்களைத் தெரியும். ஒருக்கால் ஒரு சிலருக்குத் தெரியாமலிருக்கலாம். நான் பிறப்பதற்கு முன்னமே இவர்களிருவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தனர். அதை சற்று நினைத்துப் பாருங்கள். நானே வயோதிபன். பாருங்கள், அவர்கள் இன்னமும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு வருவதைக் காணும் போது, நான் தைரியம் கொள்கிறேன். இந்த மூலையில் அமர்ந்திருக்கும் சகோ. பில் டெள என்பவரை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். 12ஓ, தேவனுடைய மகத்தான ஆசீர்வாதங்களுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கடைசி எக்காளம் தொனிக்கும் வரை, அவை தொடர்ந்து நீடிக்கட்டும், கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்க நாம் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவோம். அதை சற்று சிந்தித்துப் பாருங்கள் நாம் காணப்படாமற் போவோம். மற்றவர்கள் நம்மை காணமுடியாது. ஆனால் உயிரோடெழுந்த பரிசுத்தவான்களின் குழுவுடன் நாம் ஒன்று சேர்ந்து விடுவோம். “கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை,” (அவர்களைத் தடுப்பதில்லை என்று எழுதப்பட்டுள்ளது). மரிப்பதல்ல, நித்திரையடைதல், கிறிஸ்தவர்கள் மரிப்பதில்லை. அவர்கள் சற்று இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர், (பாருங்கள்?) அவ்வளவுதான். ஓ, என்னே! “தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவதாக உயிரோடெழுந்து அநேகருக்கு காணப்படுவார்கள். அப்பொழுது நீங்கள் கண் கூடாகக் கண்டு, ''அதோ அந்த சகோதரன்...'' என்பீர்கள். அதற்குப் பிறகு அதிக சமயமில்லையென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். சில நிமிடங்களில் ஒரு இமைப்பொழுதில் - நாமும் மறுரூபமடைந்து, அவர்களுடன் கூட சேர்ந்து, பூமியில் காணப்படாமற்போய், கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்க எடுத்துக் கொள்ளப்படுவோம். 13நாம் வேதவாக்கியங்களில் காண்பவைகளையும், நாம் வாழும் நேரத்திற்கான தெளிவான அடையாளங்களையும் நினைத்துப் பார்க்கும் பொழுது, இந்த ஆராதனை முடிவு பெறுவதற்கு முன்பும் கூட அது நிகழலாம். அதை சற்று யோசித்துப் பாருங்கள். இன்றிரவு இதை மனதில் கொண்டு தேவனுடைய வார்த்தையை அணுகுவோம். இப்பொழுது எபிரெயர்; 13ம் அதிகாரத்திற்கு வேதாகமத்தைத் திருப்புவோம். 10 முதல் 14 வசனங்கள். நான் உங்களுக்கு எப்பொழுதும் கூறுவது போன்று, நமது தேசிய கொடிக்கு நாம் எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறோம். (அது நல்லது). மற்ற மகத்தான காரியங்கள் நிகழும்போது, நாம் ராஜபக்தியுடன் எழுந்து நின்று, அதை வணங்கி, நமது தேசத்திற்கு மரியாதை செலுத்துகிறோம். அவர்கள் தேசிய கீதம் பாடும் போதும் நாம் அட்டென்ஷன்னில் (attention) நிற்கிறோம். 14கிறிஸ்தவ போர் வீரர்கள் என்னும் நிலையில், நாமும் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும் போது, ''அட்டென்ஷன்னில்,'' நிற்போம். தேவனுடைய வார்த்தையைப் படிக்கும் போது உன்னிப்பாக கவனியுங்கள். அதைப் படிக்க நான் விரும்பும் காரணம் என்னவெனில், என் வார்த்தைகள் தவறிப் போகலாம். ஆனால் அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறுவதில்லை. எனவே அவருடைய வார்த்தையைப் படித்தால் மாத்திரமே, நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள். எபிரெயர் 13ம் அதிகாரம், 10ம் வசனம் முதல்: “நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டு வரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால் நாம் அவருடைய நிந்தையை சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம். 15இந்த வார்த்தைக்குப் பொறுப்பாளியான கர்த்தராகிய தேவன், காலங்கள் தோறும் கலப்படமில்லாமல் அதைக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அது தேவனுடைய கலப்படமற்ற வார்த்தை. இந்நேரத்தில் நாம் அதை நம் இருதயங்களில் அன்புடன் பரிபாலிக்கின்றோம். ஆண்டவரே, இன்றிரவு இந்தப் பொருளை எங்களுக்குப் பிட்டுத் தந்து, மனிதராகிய நாங்கள் தேவனுடைய கட்டளையை அறிந்து கொள்ள உதவி புரியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 16இன்று மாலைக்கான பொருள், ''பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல்“ என்பதாம். அது ஒரு சிறிய பொருள்; விசித்திரமானதும் கூட நாம் தேவனை விசித்திரமான காரியங்களில் காண்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகமானது இயல்பான காரியங்களில் சென்று கொண்டிருப்பதால், அதற்கு சற்று மாறுபட்ட காரியம் விசித்திரமாகத் தென்படுகின்றது. சில நாட்களுக்கு முன்பு இக்கூடாரத்தில் ''விநோதமானவன்'' (Oddball), என்பதைக் குறித்து நான் பிரசங்கித்தேன். ஒரு வர்த்தகனுக்கு, விவசாயி விநோதமானவன். அவ்வாறே ஒரு விவசாயிக்கு, வர்த்தகன் விநோதமானவனாயிருக்கிறான். கிறிஸ்தவன் ஒருவன் அவிசுவாசிக்கு விநோதமானவனாகக் காட்சியளிக்கிறான். நீங்கள் யாராகிலும் ஒருவருக்கு முட்டாளாகவே தோற்றமளிக்க வேண்டும். எனவே, அசாதாரணமான எதுவொன்றும் சாதாரண வழக்கத்திற்கு மூடத்தனமாகக் காணப்படுகின்றது. ஆகையால் தேவனுடைய மக்களும், அவருடைய தீர்க்கதரிசிகளும், காலா காலங்களில் அவருடைய வார்த்தையைக் கொண்டு வந்த தூதுவர்களும், வெளிப்புறத்திலுள்ளவர்களால் மூடர்களாகவே கருதப்பட்டனர். நோவா, தான் பிரசங்கித்த புத்தி கூர்மையுள்ள உலகத்திற்கு, மூடனாகக் காட்சியளித்தான். அடுத்தபடியாக சிம்மாசனத்தில் அமர வேண்டிய மோசே, மண் பிசைபவர்களுடன் சேர்ந்து கொண்டு சிம்மாசனத்தைப் புறக்கணித்ததால், பார்வோனுக்கு மூடனாகத் தென்பட்டான். இயேசுவும் அவர் காலத்திலிருந்த மக்களுக்கு மூடனாகக் காட்சியளித்தார். தேவனுக்கென்று வாழ்ந்து, அவருக்கென உழைத்த ஏனையோரும் கூட மூடர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் தங்கள் பாளயங்களிலிருந்து புறம்பே செல்ல வேண்டியதாயிருந்தது. 17ஜனங்கள் கிறிஸ்துவினிடம் நெருங்குவதில்லை என்று நான் அதிகமதிகமாக எண்ண வகையுண்டு. என்னால் இயன்றவரை, நான் கூற வேண்டியவைகளை உங்களுக்குத் தெளிவாகக் கூற முனைகின்றேன். எனவே, நீங்கள் தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். நான் நாடெங்கிலும் பிரசங்கம் செய்து, ஜனங்களை கவனித்துக் கொண்டே வருகிறேன். அவர்கள் கிறிஸ்துவண்டை வருவதில்லையென்று நான் முற்றிலும் நம்புகிறேன். சத்துருவானவன் தடங்கலைப் போடுகிறான் என்று நினைக்கின்றேன்... நான் அவ்விதம் நினைக்கக் காரணம், ஜனங்கள் இயேசு கிறிஸ்துவினிடம் சுட்டிக் காட்டப்படுவதில்லை. கிறிஸ்து என்னும் வார்த்தையினிடம் அவர்கள் சுட்டிக்காட்டப்படுவதற்கு மாறாக, ஒரு தத்துவத்தினிடம், அல்லது ஒரு போதகத்தினிடம், அல்லது ஒரு அனுபவத்தினிடம், அல்லது ஒரு குழுவினிடம், அல்லது ஒரு உணர்ச்சியினிடம் சுட்டிக் காட்டப்படுகின்றனர். எனவே, ஜனங்கள் தங்கள் நித்தியத்திற்கென தத்துவத்தையோ அல்லது உணர்ச்சியையோ சார்ந்திருக்கின்றனர். சிலர், ''நான் ஆவியில் நடனமாடினேன்'' என்றும், ''நான் அன்னிய பாஷை பேசினேன் என்றும்!'' ''தேகம் முழுவதிலும் அக்கினி பாய்வது போன்றிருந்தது என்று கூறுகின்றனர்!'' இவையனைத்தையும் பிசாசு பாவனை செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? 18அவனால் பாவனை செய்ய முடியாதது ஒன்றுதான். அது தான் தேவனுடைய வார்த்தை. பிசாசுக்கும், இயேசுவுக்குமிடையே நேர்ந்த தர்க்கத்தில், ஒவ்வொரு முறையும் இயேசு, “எழுதியிருக்கிறதே!'' என்று வார்த்தையை எடுத்துக் கூறி அவனை மடங்கடித்தார். இன்றைக்கு ஜனங்கள் இயேசுவிடம் வராததன் காரணம், அவர்களில் அநேகர் ஸ்தாபனங்களிடம் சுட்டிக்காட்டப்படுவதே என்று நான் நம்புகிறேன். ”நீங்கள் எங்கள் சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள்!'' அல்லது, ''எங்கள் சபை பிரமாணங்களைப் படியுங்கள்!'' அல்லது, ''எங்கள் போதகத்தை விசுவாசியுங்கள்!'' என்றெல்லாம் கூறுகின்றனர். அவர்கள் தவறான வழியில் சுட்டிக் காட்டப்படுகின்றனர். அவர்கள் வாழும் வாழ்க்கையிலிருந்து, அவர்கள் கிறிஸ்து அற்றவர்களாக வாழ்கின்றனர் என்று ருசுவாகின்றது.000000000 19உதாரணமாக - நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை, ஆனால் நாடு முழுவதிலும், பெண்கள் தலைமயிரைக் குட்டையாக வைத்துக் கொள்வதை நான் கண்டித்திருக்கிறேன். வேதம் அவ்வாறு கூறுகின்றது. பெண்கள் சிறிய கால் சட்டை அணிவதையும், முகவண்ணங்கள் உபயோகிப்பதையும் நான் கண்டிருக்கிறேன். ஆயினும், ஆண்டுதோறும் அது மோசமாகிக் கொண்டே வருகிறது. வேறொரு விரல் வேறொரு வழியைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதையே இது காண்பிக்கின்றது. அவர்கள் கிறிஸ்துவினிடம் வருவதில்லை. “நாங்கள் இன்னின்ன ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள். எங்கள் ஸ்தாபனம் அவ்விதம் கூறுவது கிடையாது” என்கின்றனர். உங்கள் ஸ்தாபனம் எதை விசுவாசித்தாலும், அதனால் எவ்வித வித்தியாசமுமில்லை. ஏனெனில் அது தவறென்று தேவன் கூறியுள்ளார். அவர்கள் கிறிஸ்துவினிடம் வருவார்களானால், அதை நிறுத்திக் கொள்வார்கள். அது மாத்திரமல்ல, ஒரு மனிதன் கிறிஸ்துவினிடம் வரும்போது, அவன் தனது ஸ்தானத்தை வகித்து, அத்தகைய செயல்களுக்கு விரோதமாயிருப்பான். கணவர் தங்கள் மனைவிகள் அவ்விதம் இருக்க அனுமதிக்கமாட்டனர். உண்மையான மனிதன் எவனும் தன் மனைவி அவ்விதம் நடந்து கொள்ள சம்மதிக்க மாட்டான். 20அன்றொரு நாள் பட்டினத்திலுள்ள வாலிபன் இரு பையன்களைக் கொன்றுவிட்டான். அவர்கள் பெட்ரோல் நிறைக்கும் ஸ்தலத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தனர் (ஜெபர்ஸன்வில்லில் உள்ளவர்கள் இதை செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்). அந்த வாலிபனின் மனைவி ஏறக்குறைய ஒரு ஆடையும் கூட அணியாமல் அங்கு சென்றாள். இந்த இரு சிறுவர்களும், அவளைப் பார்த்து கேலி செய்தனராம். அவன் அவர்களைக் கொன்று போட்டு, அதன் விளைவாக கைது செய்யப்பட்டான். நீதிபதி அவனிடம், ''அவள் ஏன் அவ்விதம் ஆடையணிந்திருந்தாள்?'' என்று கேட்டார். அவன், “அவள் அந்த உடையில் மிக அழகாயிருந்தாள் என்று நினைத்ததால் நான் சம்மதித்தேன்'' என்று பதிலுரைத்தான். அந்த மனிதனிடம் ஏதோ தவறுள்ளது. அவன் யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை... அவன் பாவியாயிருந்தால், அவனிடம் ஏதோ தவறுண்டு. அவளை நாயைப் போல் செல்ல அனுமதித்த அவனுக்கு அவள் பேரில் உண்மையான அன்பில்லை என்று தான் அர்த்தமாகிறது. எங்கோ தவறுள்ளது நன்மை, தீமை என்னவென்று வகையறுக்கும் ஞானத்தை மனிதன் பெற்றுள்ளான் என்னும் உணர்ச்சி அவனுக்கில்லையா என்ன? 21இப்பொழுது வெளிவந்துள்ள புதிய நீச்சல் உடைகளை நீங்கள் பார்த்தீர்களா? பெண்கள் முடிவில் அத்தியிலைக்கு வந்து விடுவார்கள் என்று முப்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்பு நான் முன்னுரைத்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவர்கள் இப்பொழுது அத்தியிலைகளால் தங்களை உடுத்திக் கொண்டு உட்புறம் அனைத்தும் காணத்தக்க ஆடைகளை அணிந்துள்ளனர். தேவனுடைய வார்த்தை ஒரு போதும் தவறாது. கடைசி காலத்திற்கு முன் அது நிறைவேற வேண்டியதாயுள்ளது... மீண்டும் அத்தியிலைக்கு வருதல் அதைக் குறித்து நான் லைஃப் பத்திரிக்கையில் படித்தேன். பெண்கள் இவ்விதம் விழுந்து போவதற்கு முன்பே, முப்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்னர் இது முன்னுரைக்கப்பட்டது. அவர்கள் இக்காலத்தில் என்ன செய்வார்கள் என்று அன்று உரைக்கப்பட்டது இன்று நிறைவேறுகின்றது. அவர்கள் எவ்வாறு மனிதனுடைய ஆடைகளை உடுத்திக் கொள்வார்கள் என்றும், பெண்கள் நடத்தை இந்நாட்டில் மோசமாகிக் கொண்டே வரும் என்றும் முன்னறிவிக்கப்பட்டது. எல்லா நாடுகளைக் காட்டிலும் மிக மோசமான நிலையைடைந்துள்ள நாடு அமெரிக்க நாடு தான். அவையனைத்திலும் இதுதான் மிகவும் அசுத்தம் வாய்ந்தது என்று புள்ளி விவரம் அறிவிக்கின்றது. உலகிலுள்ள எல்லாவிடங்களைக் காட்டிலும், இங்கு தான் விவாகமும், விவாகரத்தும் அதிகமாயுள்ளது மற்ற நாடுகள் இதனை இப்பொழுது மாதிரியாக வைத்துள்ளன. முன்பெல்லாம் நாம் பிரான்சு தேசத்தை மாதிரியாக வைத்து, அதன் அசுத்தத்தைப் பின்பற்றி வந்தோம். ஆனால், இப்பொழுதோ ஆடை, அலங்காரத்தை அது நம்மிடமிருந்து பெறுகிறது. அவர்களுடைய எல்லையை நாம் கடந்துவிட்டோம். 22ஜனங்கள் கிறிஸ்துவினிடம் வராததற்கு சில காரணங்கள் உண்டு என்று எனக்குத் தெரியும். அவர்கள் அவரிடம் வந்திருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனங்களைப் பரிசுத்தம் செய்யும் படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுப்பட்டார். ''பரிசுத்தமாக்கப்படுதல்'' (Sanctification) என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதன் அர்த்தம், “சுத்திகரிக்கப்பட்டு, ஊழியத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்படல்” என்பதாம். தேவன் தாமே இயேசுவின் இரத்தத்தினால் தமது ஜனங்களைச் சுத்திகரிக்கும் போது, அவர்களை உலக அசுசியினின்றும் சுத்திகரித்து, அவர்களை ஊழியத்திற்கென ஒதுக்கி வைக்கிறார். ''அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' முழு சுவிசேஷ கூட்டத்தைச் சேர்ந்த ஜனங்களும் கூட, அவர்கள் எந்த பாதையிலிருந்து வெளிவந்தனரோ, அதே பாதைக்கு, திரும்பவும் சென்று விட்டனர். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெந்தெகோஸ்தே சபை எப்படியிருந்தது? அவர்கள் விட்டு வெளிவந்த ஸ்தாபனங்களை அவர்கள் கடிந்து கொண்டு பரிகாசம் செய்தனர். ஆனால், இப்பொழுது என்ன செய்கின்றனர்? நாய் தான் கக்கினதைத் தின்னவும் கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பின விதமாக, அவர்கள் விட்டு வெளி வந்த அதே நிலைக்குத் திரும்பவும் சென்றுவிட்டனர். தற்பொழுது அவர்களுடைய சபைகளும் மற்ற சபைகளைப் போன்றே அசுத்தமாயுள்ளது. 23இன்றுகாலை நான் கூறின விதமாக... ஜனங்கள் பேதுருவைப் போல் இருக்கின்றனர். பேதுரு, ஆண்டவரே, ''நாம் இங்கே இருக்கிறது நல்லது; இங்கே மூன்று கூடாரங்களைப் போடுவோம்'' என்று மத்தேயு.17:4ல் உரைத்தான். ஆனால் ஆவியானவர், அவர்களைத் தடை பண்ணினார். ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்'' என்று அவர் கூறினார். அவர் தான் வார்த்தை. வார்த்தையாகிய அவரைத்தான், நாம் நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோமேயன்றி, நமது ஆர்வத்தையோ அல்லது வேறொன்றையோ அல்ல. ''இவர் என்னுடைய வார்த்தை, இவருக்குச் செவி கொடுங்கள்'' இந்த சத்தம் அவர்களிடம் பேசின பின்பு, அவர்கள் யாரைக் கண்டனர்? மோசேயும், எலியாவும் கூட அங்கில்லை. அங்கு ஒரு கோட்பாடும் கூட இல்லை இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரும் அங்கு காணப்படவில்லை. அவரே வார்த்தை, அவரை மாத்திரமே அவர்கள் கண்டனர். இப்பொழுது, பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல். 24இந்த மகத்தான சம்பவம் பாளயத்தில் மறுரூபமலையில் நிகழ்ந்த போது அவர் அவர்களைச் சந்தித்த மலையை பேதுரு, ''பரிசுத்த மலை'' என்று பின்னர் அழைத்தான்... மலை பரிசுத்தமானது என்று பேதுரு அப்போஸ்தலன் கருதினதாக நான் நினைக்கவில்லை. பரிசுத்தமுள்ள தேவன் அந்த மலையின் மேல் காணப்பட்டார் என்னும் அர்த்தத்தில் தான் அவன் கூறியிருப்பான். பரிசுத்த சபை என்று ஒன்றில்லை. பரிசுத்த மக்களும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் இருப்பதே அது. பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமுள்ளவர். அவரே உங்கள் நிர்வாகஸ்தரும், உங்கள் தலைவருமாவார். அந்த மறுரூபமலையின் மேலிருந்த பாளயத்தில் அவர்கள் செவிகொடுக்க வேண்டும் என்னும் கட்டளை கொடுக்கப்பட்ட போது... வார்த்தையைக் கேட்க வேண்டுமென்று மாத்திரமே அவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்கள் பிரமாணத்தையோ அல்லது வேறொன்றையோ காணவில்லை. அவர்கள் கண்ட ஒன்றே ஒன்று இயேசு மாத்திரமே. அவரே வார்த்தை மாமிசமானவர். ஏதேன் தோட்டத்திலிருந்த அதேவிதமான பாளயம் எவ்வளவு அழகாயிருந்தது! தேவன் தமது சபைக்கு ஏதேன் தோட்டத்தில் அரண் ஒன்றைக் கட்டிக் கொடுத்த போது அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஒரு சுவர் மாத்திரமேயிருந்தது. அதுதான் வார்த்தை. அவர்களுக்கு ஒரு கேடயம், ஒரு சர்வாயுத வர்க்கம் இருந்தது. ஏனெனில், எது பிசாசை மடங்கடிக்குமென்று தேவன் அறிந்திருந்தார், அதுதான் வார்த்தை! இயேசுவும் அதைதான் செய்தார். “இது தான் வார்த்தை; இவ்விதம் எழுதியிருக்கிறதே” என்று அவர் கூறினார். சாத்தான் அதை மழுப்பப் பார்த்தான். ஆனால் இயேசுவோ, ''இப்படியும் எழுதியிருக்கிறதே!'' என்று கூறினார். நாம் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். 25அங்கிருந்த அந்த சிறு பாளயத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் இருந்தனர். இயேசு மோசே, எலியாவும் இருந்தனர். அவர்களுடைய, பாளயத்தில், பரலோக சேனையின் நிழல் அல்லது அக்கினி ஸ்தம்பம், கர்த்தராகிய இயேசுவை மறுரூபப்படுத்தின அந்த மேகத்திலிருந்து தொங்குவதை அவர்கள் கண்டனர். அவர்கள் அங்கு ஸ்தாபனத்தை ஒன்று நியாயப்பிரமாணத்திற்கும், ஒன்று தீர்க்கதரிசிகளுக்கும் உண்டாக்க முயன்ற போது, அந்த சத்தம், “இவர் என்னுடைய நேச குமாரன். இவருக்குச் செவி கொடுங்கள்” என்றது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை, ஏதேன் தோட்டத்தில் அளிக்கப்பட்ட அதே கட்டளையாம், ''வார்த்தையில் நிலைத்திருங்கள்'' அதுவே, தேவனுடைய ஜனங்களுக்கு தேவன் அளிக்கும் பாளயமாகும். 26இன்றைக்கு ஜனங்கள் எல்லா காரியங்களிலும் அந்த பாளயத்தைத் தாண்டி சென்றுவிடுகின்றனர் என்று தோன்றுகிறது. அவர்கள் அதைத் தாண்டி சென்று விடுகின்றனர். சில நாட்களுக்கு முன், ஜெட் விமானம் உண்டாக்கும் சத்தத்தால் ஜன்னல்கள் எல்லாம் ஆடிப்போகின்றன என்று எனக்குக் கூறப்பட்டது. இந்த விமானம் அதிவேகமாகச் செல்வதால், அதுதான் ஒலிதடையையும் (Sound barrier) மீறிச் செல்கின்றது. அது புரியும் செயல்களுக்கு எல்லையே இல்லை. அதில் ஒரு பாடம் நமக்குண்டு என்று எண்ணுகிறேன். நாமும் நமது சொந்த ஒலியின் தடையை மீறி தேவனுடைய வார்த்தைக்குச் செல்லும் போது, அவ்விதம் மனித பாளயத்துக்கு வெளியே செல்ல ஆயத்தமாயுள்ள மனிதனுக்கு, தேவன் புரியும் செயல்கள் அளவற்றவை. 27இப்பொழுது, பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல்... பிசாசும் தன் மக்களை விவேகம், இயற்கையறிவு (Common Sense) என்னும் பாளயத்துக்கு அப்பால் கொண்டு செல்கிறான் என்பதை காண்கிறேன். சாத்தான் ஒரு வழியில் தனது மக்களை பாளயத்துக்குப் புறம்பே கொண்டு செல்கிறான். தேவன் தமது மக்களை வேறொரு வழியில் பாளயத்துக்குப் புறம்பே கொண்டு செல்கிறார். சாத்தான் தன் ஜனங்களை சாதாரண ஒழுக்கத்திற்கு (Common decency) அப்பால் கொண்டு சென்று விட்டான். ஜனங்கள் இன்று தங்கள் விருப்பப்படி ஒழுக்கமின்றி நடந்து கொண்டு, எவ்வித குற்றமுமின்றி தப்பித்துக் கொள்ளும் நிலையையடைந்துள்ளனர். எப்படி ஒரு மனிதன் தன் மனைவியை அவ்வித ஆடையணிய சம்மதித்து, அவளைக் கேலி செய்பவர்களைக் கன்னத்தில் அறைய முடிகிறது என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அது நமது இயற்கையறிவுக்கு அப்பாற்பட்டது. அதைக் குறித்து அவன் நன்கு அறிந்திருக்க வேண்டும். அது சாதாரண ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டது. இது எங்கு முடிவடையப் போகின்றது? 28என் வயதுள்ள ஒரு மனிதனையோ அல்லது ஸ்திரீயையோ இந்தக் கேள்வி கேட்க விரும்புகிறேன். என் தாயாரோ அல்லது உங்கள் தாயாரோ ஐம்பது ஆண்டுகட்கு முன்பு இத்தகைய குட்டை கால் சட்டை அல்லது பிக்கினி (Bikini) ஆடையை அணிந்து வீதியில் சென்றிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? தேசத்தின் சட்டம் அவர்களைப் பிடித்து பைத்தியக்காரர் விடுதிக்கு அனுப்பியிருக்கும். மேல் ஆடை எதுவுமின்றி ஒரு பெண் வீட்டை விட்டு சென்றால், அவள் அந்த விடுதியில் தான் இருக்க வேண்டும். ஏனெனில், ஏதோ மூளைக் கோளாறு ஏற்பட்டு விட்டது என்று தான் அர்த்தம். அன்று அவ்விதமிருக்குமானால், இன்றும் மூளைக்கோளாறின் அடையாளமாகத்தான் அது இருக்க வேண்டும். மூளையில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. விவேகத்திற்கு அப்பாற் சென்று அசுத்தத்தில் இருத்தல். 29மனிதன் புகை பிடிக்கிறான். புகை பிடிப்பதனால் ஆயிரக்கணக்கானவர் ஆண்டுதோறும் மாண்டு போகின்றனர் என்று மருத்துவர்கள் நிரூபித்திருக்க, அவன் இன்னும் புகை பிடித்துக் கொண்டிருக்கிறான் என்றால், அவனுடைய மூளையில் ஏதோ கோளாறு உள்ளது என்றுதான் தோன்றுகிறது. ஒரு மனிதனுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டு அவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையையடையும் போது, அவனுக்கு என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதையறிய, அவன் நாட்டிலுள்ள எல்லா மருத்துவர்களின் அலுவலகங்களை தேடிச் செல்கிறான். அப்படியிருக்க, மனிதன் மது அருந்தும் ஸ்தலங்களிலும், காரிலும், பைத்தியக்கார நிலைமையடையும் வரை குடித்து, தன் பணத்தையெல்லாம் செலவிடுகிறான். அதே சமயத்தில், குடிப்போதையின்றி அந்தப் பைத்தியக்கார நிலையை அவன் அடையும் போது, தனக்கு என்ன கோளாறு என்று அறிந்து கொள்ள, கடைசி பைசா வரைக்கும் மருத்துவர்களின் அலுவலகங்களில் செலவிடுகிறான். இது அர்த்தமற்றதாயுள்ளது. 30ஒரு பருந்துக் குஞ்சு பட்டினத்தில் பறந்து வந்து, என் துப்பாக்கியைக் கொல்லை புறத்திற்குக் கொண்டு சென்று அதை சுட்டு கொன்றால், பத்தே நிமிடங்களில் என்னைச் சிறையில் பருந்தைக் கொன்றதன் மூலம், அநேகருடைய ஜீவனுக்கு ஆபத்தை விளைக்கும் செயலில் ஈடுபட்டேன் என்னும் காரணங் கொண்டு என்னைக் கைது செய்து விடுவார்கள். இப்படிச் செய்ததனால், தவறுதலாக நான் ஒரு மனிதனைக் கொன்றிருக்க வகையுண்டு; எனவே, இவனைச் சிறையில் தள்ள வேண்டுமென்று கூறுவார்கள். அதே சமயத்தில் அவர்கள் மனிதனுக்கு, போதையுண்டாகும் வரை அவனுக்கு மதுவை விற்று, அவனைக் காரோட்டச் செய்து, ஒரு குடும்பம் முழுவதும் விபத்தில் கொல்லபடுவதற்குக் காரணமாயுள்ளனர். அவன் பிடிபட்டால் அவனுக்கு ஐந்து டாலர் அபராதமும், அந்தக் காரின் விலையை மாத்திரமே அவனிடமிருந்து வசூலிக்கின்றனர். திட்டமிட்டு செய்த கொலை! (Premeditated murder) இவ்வுலகிற்கு என்ன சம்பவித்துள்ளது? எங்கோ ஏதோ தவறுள்ளது. 31பாளயத்துக்குப் புறம்பே செல்லுதல்; ஒழுக்கத்திற்கும், விவேகத்திற்கும் அப்பால் செல்லுதல். பாருங்கள், வேதத்தை பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்பதைக் குறித்து நமது அரசியல்வாதிகள் ஒன்றுமே கூறுவதில்லை. அவர்கள் பயப்படுகின்றனர். எந்தப் பக்கம் காற்றடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது. இதன் காரணமாக அவர்கள் வாக்கு சீட்டுகளை (Votes) இழந்து விடுவார்களோ என்னமோ என்று அஞ்சுகின்றனர். நமக்கு இன்னுமொரு ஆபிரகாம் லிங்கன் அவசியம்; இன்னுமொரு ஜான் க்வின்ஸி அவசியம். காற்று எந்த பக்கம் அடித்தாலும் கவலையுறாமல், தங்கள் உத்தமமான கருத்துக்களை எடுத்துக்கூறும் ஒருவர் நமக்கு அவசியமாயுள்ளது. இன்றைக்கு ஒரு ஸ்தாபன் போதகரிடம் இதுதான் சத்தியம் என்று வேதாகமத்திலிருந்து எடுத்துரைத்தால் அவருக்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. அவருடைய போஜனச் சீட்டு (Meal Ticket) போய்விடுமே என்று பயப்படுகின்றார். சுவிசேஷ ஜூவாலையினால் எரிந்து கொண்டிருக்கும் ஆண்களும், பெண்களும் நமக்கு அவசியமாயுள்ளது. தன் கருத்துக்களை வெளிப்படையாய் கூறி, சரி எதுவென்றும், தவறு எதுவென்றும் எடுத்துக் கூறி, தேவனுடைய வார்த்தை சரியா அல்லது ஸ்தாபனங்கள் கூறுவது சரியாவென்று அச்சமின்றி பகிரங்கமாகக் கூறும் ஒருவர், நமக்கு அவசியமாயுள்ளது. 32“எல்லா மனுஷரும் பொய்யர்; நானே சத்தியபரர். வானமும், பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்று இயேசு கூறினார். ஆனால் அவர்களோ, விடை கண்டு பிடிக்க, தேவனுடைய வார்த்தை என்னும் பாளயத்துக்குப் புறம்பே செல்கின்றனர். தேவனுடைய வார்த்தை என்னும் பாளயத்துக்குப் புறம்பே செல்ல அவர்களைத் தூண்டினது எது?... சாத்தான் ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் செய்தது போன்று, இக்காலத்திலும் செய்து வருகிறான். அதை நாம் காண்கிறோம். பாளயத்துக்குப் புறம்பேயுள்ள, ஸ்தாபனக் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் அவர்கள் பின்பற்ற ஏவப்படுகின்றனர். அவர்களுடைய பாரம்பரியமாகிய ஸ்தாபனக் கோட்பாடுகளும், தத்துவங்களும் அவர்களுக்கென்று ஒரு பாளையம் உள்ளது. அது சாத்தானுடைய பாளயத்தில் அவர்களைக் குத்துகின்றது. அவனுடைய பாளயம், கல்வி, வேதத்துவம், கிரியைகள் டாக்டர் பட்டம், கல்வி முறைமை, தனிப்பட்ட மனிதனின் பிரக்கியாதி போன்றவைகளைக் கொண்டது. இவையனைத்தும் தேவனுடைய வார்த்தையெனும் பாளயத்துக்கு முரணானவை. தேவன் தமது மக்களுக்கென்று ஒரு பாளயத்தை வைத்துள்ளார். அவ்வாறே ஸ்தாபனங்களுக்கும் தங்கள் சொந்த பாளயம் உண்டு. 33மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர், ஒரு மனிதன் தேவனை எங்கு வேண்டுமானாலும் சந்திக்கலாம். மனிதன் தேவனைச் சந்திப்பதென்பது அக்காலத்தில் ஒரு சாதாரண செயலாயிருந்தது. ஆனால், இன்றைக்கு அவர்கள் ஏன் தேவனைச் சந்திப்பதில்லை? மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த ஜனத்தொகையைக் காட்டிலும் இன்று ஜனத்தொகை கோடிக் கணக்காக பெருகியுள்ளது. அப்டியிருந்தும், தேவன் என்பவர் ஒரு புராதன சரித்திரமாக இன்று கருதப்பட்டு, அவரைக் குறித்து மாத்திரம் பேசப்படுகின்றது. அநேக ஆண்டுகட்கு முன்பு செய்தது போன்று, தேவனை இன்று ஜனங்கள் தனிப்பட்ட விதத்தில் சந்திப்பது கிடையாது. மனிதன் தேவனைச் சந்திப்பதென்பது இப்பொழுது அசாதாரணமாகிவிட்டது. அதைக் குறித்து ஒரு மனிதன் பேசினாலும் கூட, அவன் பைத்தியக்காரனென்றும், மூளைக்கோளாறு உள்ளவனென்றும் கருதப்படுகின்றான். அது அவர்களுக்கு அசாதாரணமாகிவிட்டது. 34ஆபிரகாமும் அவனுடன் கூட இருந்தவர்களும் - ஏன், ஆபிரகாம் தேவனை நாள்தோறும் சந்தித்தான். அவன் அவருடன் பேசினான். அவர்கள் கேராருக்குச் சென்ற போது, கர்த்தர் பெலிஸ்தியனாகிய அபிமலேக்கின் பாளயத்தில் இருந்தார் என்று நாம் பார்க்கிறோம். அது ஒரு சர்வசாதாரணமான காரியமாக இருந்து வந்தது அவர்கள் அவருடைய பிரசன்னத்தின் பாளயத்தில் தங்கியிருந்தனர். ஆனால் இன்றோ, அவர்கள் தங்கள் சொந்த பாளயத்தில் குடியிருக்கின்றனர். தேவனுடைய பாளயத்துடன் அவர்களுக்கு எவ்வித தொடர்புமில்லை, அதனுடன் எவ்வித தொடர்பு கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், உலகிற்கு அது பைத்தியக்காரத்தனமாய் உள்ளது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள் தேவன் முதன்முறையாக, தமது பாளயத்தை மக்களுக்காக ஏற்படுத்தின போது, தமது வார்த்தையை அதற்கு அரணாக வைத்தார். அவர் என்றென்றைக்கும் அதையே செய்கிறார். ஆனால், இன்று அவர்கள் தங்கள் பாளயங்களில் அவ்விதம் செய்வதில்லை. அதனால் தான் நீங்கள் தேவனைக் குறித்து அதிகம் கேட்பது கிடையாது. 35கர்த்தர் மோசேயை வனாந்திரத்தில் சந்தித்தார்... மோசே தன் மாமனாகிய யெத்ரோவின் ஆடுகளை வனாந்திரத்தின் பின் பாகத்தில் மேய்த்துக் கொண்டிருந்த போது, அவனுக்கென்று ஒரு பாளையம் இருந்தது. ஒருநாள் இந்த எண்பது வயதான மேய்ப்பன் அக்கினி ஸ்தம்பம் முட்செடியில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் தேவனைச் சந்தித்தான் - தேவனுடைய சமுகத்திலிருந்து ஓடிப்போன மனிதன். அடுத்த நாள்... சில சமயங்களில் தேவனைச் சந்தித்தல், வழக்கத்திற்கு மாறான செயல்களை நீங்கள் புரிவதற்குக் காரணமாயுள்ளது. அடுத்த நாள் மோசே வழக்கத்திற்கு மாறான செயல்களை புரிந்தான். அவன் கோவேறு கழுதையின் மேல் சேணம் கட்டி, இடுப்பில் குழந்தையை வைத்திருந்த அவன் மனைவியை அதன்மேல் ஏற்றினான். அவனுடைய நீண்ட தாடி தொங்கிக் கொண்டிருக்க, கையில் ஒரு கோணலான கோலைப் பிடித்துக் கொண்டு, எகிப்து தேசத்தைக் கைப்பற்ற அவன் எகிப்தை நோக்கிச் சென்றான். காண்பதற்கு அது பரிகாசமான காட்சியாக இருந்தது. “மோசே, எங்கு செல்கின்றாய்?” ''எகிப்துக்குச் செல்கிறேன்.“ “எதற்காக?” “கைப்பற்ற.” அவன் தேவனைச் சந்தித்தான். ஒரே ஒரு மனிதனின் படையெடுப்பு. அது விசித்திரமாகத் தென்பட்டது. ஆனால் உண்மையில் அவன் அதைச் செய்து முடித்தான்; ஏனெனில் அவன் தேவனைச் சந்தித்தான், ருஷியாவைக் கைப்பற்ற ஒரே ஒரு மனிதன் போவது போல. நமக்குத் தேவையெல்லாம் தேவனுடைய சித்தத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு மனிதனே. மோசே, தேவனுடைய சித்தத்தில் அமைந்திருந்தான். அவனுடைய கையில் கோணலான கோல் ஒன்று இருந்தது - பட்டயமல்ல, கோல். தேவன் செய்யும் அசாதாரணமான செயல். 36இதைச் செய்ய மோசே தான் வாழ்ந்து வந்த பாளயத்தை விட்டுப் புறம்பே வர வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் முழு சைனியத்துடன் அங்கு இருந்த போதிலும், அவனால் அதைச் சாதிக்க முடியவில்லை. எகிப்திலிருந்த சைனியங்களைக் கொண்டு, அவனால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு நாள் கர்த்தர் அவனைத் தமது பாளயத்திற்கு அழைத்தார். அவன் தேவனை நோக்கி, “நீர் யார்?'' என்றான். அவர், ''நான் இருக்கிறவராகவே, இருக்கிறேன்'' என்றார். “இருந்தேன்'' அல்ல, ''இருப்பேன்'' அல்ல, ''இருக்கிறேன்'' - நிகழ் காலம், ''நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். என் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். என் வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன். அது நிறைவேற இதுதான் தருணம். மோசே, கையில் இந்தக் கோலுடன் உன்னை அனுப்புகிறேன்.” 37அது என்ன? அவன் பைத்தியக்காரனென்று ஜனங்கள் கருதினர். அவன் என்ன செய்தான்? தன் சொந்த பாளயத்தைவிட்டு அவன் வெளி வந்தான். பார்வோன் அவனுக்கு தன்னுடைய பள்ளிக்கூட பாளயத்தில் நாற்பது ஆண்டுகள் கல்வி கற்பித்தான். ஆனால் அவனோ தோல்வியடைந்தான். அவன் கற்றவைகளை அகற்ற - அவன் படித்த கல்வியையும் வேததத்துவத்தையும் புறம்பாக்க - கர்த்தருக்கு மற்றொரு நாற்பது ஆண்டுகள் அவசியமாயிருந்தது. அவனிடமிருந்து அதை அகற்றிப் போட நாற்பது ஆண்டுகள் பிடித்தன. பின் கர்த்தர் அவனை நாற்பது ஆண்டு காலம் உபயோகித்தார். மனிதர்களை ஆயத்தப்படுத்த கர்த்தர் அரும்பாடு பட வேண்டியதாயுள்ளது. ஆனால் பாருங்கள், மனிதரால் உண்டாக்கப்பட்ட, இராணுவ முறையான, மாமிசப்பிரகாரமான பாளயத்தை விட்டு மோசே வெளியேறும் வரை, இயற்கைக்கு மேம்பட்ட செயல்களை அவன் மூலம் செய்ய அவரால் முடியவில்லை. தேவனுடைய பாளயத்துக்குள் அவன் வந்த பின்பே, தேவன் அவனை உபயோகிக்க முடிந்தது. 38அந்த வனாந்திரத்தில் நாம் பார்க்கிறோம். அவர்கள் உறுதிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறி, தேவனுடைய பாளயத்துக்குள் வந்த போது - ''உங்கள் வாழ்நாள் பூராவும் அடிமைகளாயிருங்கள்'' என்று ஆசாரியர்களும், மற்றவர்களும் கூறினரே, அவர்களுடைய பாளயத்தைவிட்டு அவர்கள் வெளிவந்த போது... தீர்க்கதரிசியாகிய மோசே அங்கு சென்று, தேவனுடைய வார்த்தை வந்துள்ளது என்றும், வாக்குத்தத்தம் பண்ணின் தேவன் ஜனங்களை விடுவிக்க அங்கிருக்கிறார் என்பதை அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் அவனை உறுதிப்படுத்தின போது அவர்கள் தங்கியிருந்த பாளயத்திலிருந்து அவர்கள் வெளியேறி, அந்த மணி நேரத்துக்கு தேவன் வாக்களித்திருந்த வார்த்தையாகிய பாளயத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் தீர்க்கதரிசியை விசுவாசித்தனர். ஏனெனில் அற்புதங்களும், அடையாளங்களும், அது தேவனுடைய வார்த்தை என்பதை உறுதிப்படுத்தின. அவன் செய்த காரியங்கள் யாவும் அது சரியென்று நிரூபித்தன. மட்டுமின்றி, அவனுடன் சென்ற அக்கினி ஸ்தம்பம், அது தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபித்தது. 39இந்த பாளயத்தில் அற்புதங்கள், அடையாளங்கள் போன்றவை இந்தப் பாளயத்தில் இருந்தன. அவை அவர்களை வனாந்திரத்திலிருந்து வெளியே கொண்டு சென்றன. உலகப் பிரகாரமான மண் பிசையும் பாளயத்தை அவர்கள் விட்டனர். கல்லினாலும், வைக்கோலினாலும் செய்யப்பட்ட பாளயத்தை; அவர்கள் விட்டு வெளியேறி, வனாந்திரத்தில் கூடாரங்களில் தங்கினர். அங்கு தானியம் எதுவும் கிடைக்கவில்லை. சில சமயங்களில், நமது சிந்தனைக்கு மூடத்தனமாக தென்படும் காரியங்களை நாம் செய்ய வேண்டுமென்று தேவன் கூறுகிறார். உங்கள் சொந்த ஞானம் என்னும் பாளயத்தை நீங்கள் விட்டு வெளியேறும் போது தான் நீங்கள் தேவனைக் காண்கிறீர்கள். கவனியுங்கள், அவர்கள் வனாந்திரத்துக்குள் சென்ற போது, அற்புதங்களும், அடையாளங்களும் இங்கு காணப்பட்டன. அவர்கள் எகிப்தின் பாளயத்தைவிட்டு, தேவனுடைய பாளயமாகிய வனாந்திரத்துக்குள் சென்றனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது எப்படி உங்களுக்குத் தெரியும்? ''உன் சந்ததியார் நானூறு வருஷம் பரதேசியாயிருப்பார்கள். நானோ அவர்களைப் பலத்த கரத்தால் வெளியேறப் பண்ணி இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்“ என்று கர்த்தர் (ஆபிரகாமுடன்) கூறியிருந்தார். உறுதிப்படுத்தப்பட்ட ஒளி வழிகாட்டினதன் மூலம் அவர்கள் பாதையில் நடந்து சென்றனர். அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி அவர்களுக்கிருந்தான். இவையனைத்தும், தேவன் அவர்களுடைய பாளயத்தில் இருக்கிறாரென்றும், அவர்கள் சரியான பாதையில் செல்கின்றனர் என்பதையும் நிரூபித்தன. அவர்களுக்கு அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர்களுக்கு தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவர்களுக்கு மன்னா இருந்தது; அவர்களுக்கு ஜீவத்தண்ணீர் இருந்தது. ஆமென்! அவர்கள் பாளயம் மாறினர். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. எகிப்தில் இவைகளை அவர்கள் காணவில்லை. இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் காண்பதற்கென அவர்கள் பாளயம் மாற வேண்டியதாயிருந்தது. அதுபோன்றே இன்றைக்கும் அற்புதங்களின் காலம் முடிவடைந்து விட்டது. ''பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒன்று கிடையாது'' என்றும், ''வேதவாக்கியங்கள் எல்லாம் தவறு; அவை வேறொரு காலத்துக்குரியவை'' என்றுரைக்கும் ஸ்தாபனங்களின் பாளயத்தைவிட்டு ஜனங்கள் மாற வேண்டியவர்களாயிருக்கின்றனர். உங்கள் பாளயத்தைவிட்டு நீங்கள் மாற வேண்டும். அந்த பாளயத்துக்குப் புறம்பே சென்று, எல்லாம் கைகூடும் இடத்தை அடையுங்கள். 40அவையனைத்தும் அவர் பாளயத்தில் பிரசன்னராயிருக்கிறார் என்பதை நிரூபித்தன. இப்பொழுது கவனியுங்கள். அதன் பின்பு அவர்கள்... மோசே மரித்தபின் அவர்கள், பாரம்பரியமும், கோட்பாடுகளும் கொண்ட, மனிதனால் உண்டாக்கப்பட்ட பாளயம் ஒன்றை தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டனர். அநேக ஆண்டு காலமாக தேவன் ஜனங்களுடன் தொடர்பு கொண்டு வந்தார். ஆனால், அவர்கள் தங்களுக்கென்று ஒரு பாளயம் ஏற்படுத்திக் கொண்ட காரணத்தால், தேவன் அந்த பாளயத்தில் இல்லாமல் போனார். கவனியுங்கள், அவர்கள் எகிப்தை விட்டு வெளியே அழைக்கப்பட்ட போது, தேவன் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைத் தந்தருளினார், பலி செலுத்தப்பட்ட ஒரு ஆட்டை தந்தருளினார். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் தந்தருளினார் - வார்த்தை, அடையாளம், அற்புதம், அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசி அவர்களைப் பாதுகாக்க ஒரு பலி, அவர்களை வழிநடத்த ஒரு அக்கினி ஸ்தம்பம். அவர்கள் வனாந்திரத்தை அடைந்த போது இவைகளைப் பெற்றிருந்தும் அவர்கள் திருப்தி கொள்ளவில்லை. அவர்களாகவே ஏதாவதொன்றை செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். கிருபை அவர்களுக்கு எல்லாவற்றையும் அளித்திருந்தது. ஆயினும் அவர்கள் தாங்களாகவே ஏதாவொன்றைச் செய்ய வேண்டுமென்று விரும்பி, அவர்களுக்கென ஒரு ஸ்தாபனத்தையுண்டாக்கிக் கொண்டு அவர்களில் யார் பிரதான ஆசாரியனாயிருப்பாரென்றும், யார் இதுவாகவும், யார் அதுவாகவும் இருப்பார்களென்றும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். கர்த்தர் மோசேயிடம், ''அவர்களை விட்டு பிரிந்து போ“ என்றார். கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்காக, அவர்களை அவர் விழுங்கி போட்டார். 41கவனியுங்கள், இந்த அற்புதங்களும், அடையாளங்களும் அவருடைய பிரசன்னத்தை உறுதிப்படுத்தின. பின்பு மனிதன் தனக்கென்று ஒரு பாளயத்தை உண்டாக்கிக் கொண்டான் - தேவனுடைய வார்த்தையைக் கொண்ட தேவனுடைய பாளயமல்ல. கோட்பாடுகளும், பாரம்பரியமும் கொண்ட தனது சொந்த பாளயம். அதன் விளைவாக தேவன் அவர்களை விட்டு பிரிந்து போக வேண்டியதாயிருந்தது. ஏனெனில், அவர் வார்த்தையாயிருப்பதால் வார்த்தைக்கு புறம்பாக மக்கள் போதிக்கப்படும் ஸ்தலத்தில் அவரால் இருக்க முடியாது அந்தப் பாளயத்தில் தேவன் தங்கவே முடியாது. முடியவே, முடியாது! அவர் இதற்கு முன்பு தங்கினதில்லை. அவர் வார்த்தை எங்குள்ளதோ, அங்குதான் அவரால் தங்க முடியும். 42எகிப்திலிருந்து அவர் வெளி கொணர்ந்த அந்த ஜனங்களின் பாளயத்தை அவர் விட்டுபோக நேர்ந்த போது, அவர் தமது தீர்க்கதரிசிகளின் மத்தியில் தான் தங்கியிருந்தார். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வருகின்றது. அந்த மணி நேரத்தை உறுதிப்படுத்த, தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகின்றது. அவர் தீர்க்கதரிசிகளின் மத்தியில் தங்கியிருந்து, ஜனங்கள் எவ்வாறு அதை நிராகரித்துவிட்டனர் என்பதை அவர்களுக்கு காண்பிக்கிறார். தேவன் ஜனங்களுக்கு அவருடைய கட்டளைகளையும், ஜீவ மார்க்கத்தையும் போதிக்கிறார். ஆனால், ஜனங்களோ எப்பொழுதும் அதற்கு விரோதமாய் இருந்து கொண்டு தீர்க்கதரிசியைத் துன்புறுத்தி முடிவில் அவனைக் கல்லெறிந்து கொன்று, அவனை ரம்பத்தால் துண்டு துண்டாக அறுத்து, அவனைப் போக்கி விடுகின்றனர். இயேசு, “எந்த தீர்க்கதரிசியை உங்கள் பிதாக்கள் கொல்லாமல் இருந்தார்கள்? உங்களிடம் அனுப்பப்பட்ட எந்த நீதிமான், ''உங்கள் பிதாக்களுடைய கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று சொல்லாமலிருந்தான்?” என்று கேட்டார். அவர் கம்யூனிஸ்டுகளிடம் இதைக் கூறவில்லை. அவர் ஆசாரியர்களிடம் ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களாகிய பரிசேயர், சதுசேயரிடம் - பேசிக் கொண்டிருந்தார். அவருடைய சத்தம் இன்றிரவு அதனின்று அதிக வித்தியாசமாயிராது என்று நினைக்கிறேன் - அதைக் காட்டிலும் கடினமாக இருக்கத்தான் வழியுண்டு. 43அவர் தீர்க்கதரிசிகளின் மத்தியில் தங்கினார் என்று பார்த்தோம். அப்பொழுது அவர் ஜனங்களுக்கு அந்நியராகி விடுகிறார். ஏனெனில், அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்த அங்கு மாத்திரமே தங்குகிறார். அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்த அதை கவனித்துக் கொண்டே வருகிறார் என்பதாக வேதம் கூறுகின்றது. அவர் யாரையாவது கண்டுபிடிக்க முயல்கிறார்... சிம்சோனைப் போன்ற அறைகுறையான ஒரு மனிதன் கிடைப்பானா என்று. சிம்சோன் தன் பலத்தை தேவனுக்கு அர்ப்பணித்தான். ஆனால், தன் இருதயத்தையோ அவன் தெலிலாளுக்குக் கொடுத்து விட்டான். இன்றுள்ள நாமும் அநேகமுறை அப்படித்தான் செய்கிறோம். ஏதாவது சிலவற்றை நாம் தேவனுக்குக் கொடுக்கிறோம் - எல்லாவற்றையுமல்ல. ஆனால், தேவனோ நமக்குள்ள எல்லாவற்றையும் கேட்கிறார். அது 'இன்ஷரன்ஸ் பாலிஸி' (insurance policy) எடுப்பது போன்றது. அதை நீங்கள் எடுக்கும் போது, எல்லாவற்றையும் நீங்கள் 'இன்ஷர்' செய்து கொள்ளலாம். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியும், (Blessed Assurance) அதைதான் நமக்குச் செய்கிறது. அது எல்லாவற்றையும் இன்ஷர் செய்த பாலிஸியாகும். இவ்வுலகத்தில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அது நமக்களிக்கிறது - நமது உயிர்த்தெழுதல், நித்திய ஜீவன் கூட எல்லாம் அதற்குள் அடங்கியுள்ளது. 44கவனியுங்கள்! தேவன் நானூறு ஆண்டு காலமாக அவர்களுடைய பாளயத்துக்குப் புறம்பே இருந்தார் ஏன்? அவர்களுக்கு அவர் தீர்க்கதரிசிகளை அளிக்கவில்லை. மல்கியா தொடங்கி யோவான் ஸ்நானன் வரையுண்டாயிருந்த 400 ஆண்டு காலத்தில் இஸ்ரவேல் யாதொன்றையும் செய்யவில்லை. தேவன் அவர்களுடைய பாளையத்திற்குப் புறம்போயிருந்தார். அவர்களுடைய பிரமாணங்களினாலும், சுய நலத்தினாலும், வார்த்தையை வித்தியாசமாக அர்த்தப்படுத்தினதன் காரணத்தினாலும், அவர்கள் தேவனை அப்புறப்படுத்தினர். 400 ஆண்டு காலமாக வார்த்தை இருக்கவில்லை! மல்கியா தீர்க்கதரிசியின் காலம் வரை ஒரு தீர்க்கதரிசியிலிருந்து மற்றொரு தீர்க்கதரிசியாக அவர் பயணம் செய்து வந்தார். அதன் பின்பு 400 ஆண்டு காலமாக வேறொரு தீர்க்கதரிசி உண்டாயிருக்கவில்லை. பின்பு தேவன் காட்சியில் வந்தார். ஒரு நாள் அவர் மறுபடியும், அவர்கள் மத்தியில் நடந்தார். ஆனால் அவர்களோ, பாரம்பரியத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர். அதன் விளைவாக அவர் அவர்களுக்கு அந்நியராக காணப்பட்டார். அவர்களுடைய பிதாக்களின் பாரம்பரியங்கள் - பாத்திரங்களைக் கழுவுதல், தலைவாறும் முறைமை கோட் (Coat)டில் பொத்தான் வைக்கும் முறைமை, அவர்களுடைய ஆசாரிய அங்கிகள் போன்றவை. ஒரு சாரார், வைதீக பரிசேயர், மற்றொரு சாரார், சதுசேயர் இத்தகைய பாரம்பரியங்கள் தேவனுடைய வார்த்தையின் இடத்தை எடுத்துக் கொண்ட காரணத்தால், தேவன் அவர்களைச் சந்தித்த போது, அவர் அவர்களுக்கு அந்நியராயிருந்தார். 45உங்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக இதை நான் அன்புடனும், மரியாதையுடனும் கூற முற்படுகிறேன். இன்றைக்கும் அது போன்றே சம்பவிக்கின்றது. அது சிறிதேனும் மாறவில்லை. அவர் வல்லமையுடன் மக்களின் மத்தியில் இன்று கிரியை செய்து, அவருடைய வார்த்தை நேற்றும், இன்றும், என்றும் மாறாதது என்று நிரூபித்த போதும் —- ஏனெனில், அவரே வார்த்தையாயிருக்கிறார். ஜனங்கள், “அவர் குறி சொல்பவர், பெயல்சபூல், ''இயேசு மாத்திரமே குழு போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.'' உங்களை ஏதாவது ஒரு ரகத்தில் அவர்கள் சேர்த்து விடுகின்றனர். அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டு காலமாக நமக்குத் தீர்க்கதரிசி இருக்கவில்லை. புறஜாதிகள் ஒரு தீர்க்கதரிசியைப் பெற்றிருக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியும்.... அவர் கடைசி காலத்திற்கென வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நாம் வேதவாக்கியங்களின் மூலமாக அறிவோம். அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சரித்திரத்தின் மூலமாகவும் நாமறிவோம். 46நானூறு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் தேவன் அவர்கள் மத்தியில் நடந்து வந்தார். அவர் மாமிசமாகி அவர்கள் மத்தியில் வாசம் பண்ண வேண்டும் என்று வேதவாக்கியம் உரைத்திருந்தது. ''அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்.'' ஆனால் அவர் ஜனங்களின் மத்தியில் தோன்றின் போதோ, “இவர் எங்கள் மீது ஆளுகை செய்யவிட மாட்டோம்! அவரிடத்தில் எந்த ஐக்கியச் சீட்டு உள்ளது? எந்த ஸ்தாபனம் அவரை அனுப்பினது? என்றெல்லாம் அவர்கள் கூறத் தொடங்கினர். அவருக்கு ஒத்துழைப்பு இல்லாமல் போயிற்று. அவர் சென்ற எல்லா சபைகளிலும், அவர்கள் அவரை வெளியே துரத்தினர். அவர் அவர்களை சேர்ந்தவராயிராதபடியால், அவருடன் எந்தவித தொடர்பு கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. அன்று சம்பவித்தது போலவே இன்றும் சம்பவிக்கின்றது! லவோதிக்கேயா சபை அவரை வெளியே தள்ளிவிடுமென்றும், அவர் உள்ளே நுழைய முயன்று கதவைத் தட்டிக் கொண்டிருப்பாரென்றும், வேதம் உரைக்கின்றது. எங்கோ ஏதோதவறுள்ளது. 47ஏன் இவ்விதம் சம்பவித்தது? அவர்கள் தங்கள் சொந்த பாளயத்தை உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் வார்த்தையை அறிந்திருந்தால், அவர் யாரென்பதை அறிந்திருப்பார்கள். “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, நான் யாரென்று அறிவிப்பவைகளும் அவைகளே” அப்படித்தான் வேதம் கூறுகிறது. “என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. நான் செய்வேன் என்று வாக்குரைத்துள்ள கிரியைகளை நான் செய்யாவிடில்; என் பிதா வார்த்தை, செய்த கிரியைகளை நான் செய்யாவிட்டால்...” ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். நான் அந்த நபராயிருந்தால், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, நான் என்ன செய்ய வேண்டுமென்பதைக் கண்டு கொள்ளுங்கள். நான் அதற்குத் தகுதியாயிராவிடில் - என் கிரியைகள், வார்த்தை சாட்சியிடுகின்றன; பிதா என்னைக் குறித்து சாட்சியிடுகின்ற கிரியைகளை நான் செய்யாவிட்டால், அவைகள்நான் யாரென்பதை உறுதிப்படுத்தாவிட்டால், நான் தவறானவன். அது உண்மை. நீங்கள் என்னை விசுவாசியாமற்போனால், வார்த்தையையாவது விசுவாசியுங்கள். வார்த்தை செய்யும் கிரியைகளை விசுவாசியுங்கள்'' என்றார் அவர். 48பாருங்கள் அவர்களுக்கு அவர் அந்நியராயிருந்தார் அவர்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. ''இந்த மனிதனுடன் நாங்கள் எவ்வித தொடர்பும் கொள்ள மாட்டோம் எங்கோ ஒரு முன்னணையில் பிறந்த விசித்திரமானவன்.'' அவருடைய தாயார் தவறான முறையில் அவரைப் பெற்றார்கள் என்றும், அவர் பிறப்பதற்கு முன்பே அவர்கள் யோசேப்பை மணந்து கொண்டார்கள் என்றும், அவர்களின் மேலுள்ள நிந்தை நீங்குவதற்காகவே யோசேப்பு அவர்களை மணம் புரிந்து கொண்டாரென்றும் அவர் தவறான முறையில் பிறந்ததன் காரணமாக, அவர் விசித்திரமானவர் என்றும் அவர்கள் எண்ணினர். ஆனால், அவர் இவ்வுலகில் வந்த போது என்ன செய்தார். அவர்களுடைய பிரமாணங்களை கிழித்தெரிந்து அவர்களுடைய மேசைகளைக் கவிழ்த்துப் போட்டு, அவர்களை அடித்து துரத்தி ''இன்னனின்ன பிரகாரம் எழுதியிருக்கிறதே'' என்றார். ஆமென், ''எழுதியிருக்கிறதே'' என்பது அவர் யாரென்பதை அவர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். 49சரி அப்படிப்பட்ட மனிதனுடன் அவர்கள் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. இருப்பினும், அவர் யாரென்பதை அவர்கள் இருதயத்தின் ஆழத்தின் ஆழங்களில் அறிந்திருந்தனர். ஏனெனில் நிக்கொதேமு வெளிப்படையாக, ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று (பரிசேயராகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்யமாட்டான் என்றான். (யோவான்;3:2) அப்படியானால் அவர்கள் ஏன் இதை பகிரங்கமாக அறிக்கையிடவில்லை? ஏனெனில் அவர்கள் தங்கள் பாளயத்திற்கு எல்லையொன்றை உண்டாக்கிக் கொண்டு, யாரும் அவர்களுடைய பாளயத்திற்கு உள்ளே நுழையாதபடிக்கும், யாரும் அதனின்று வெளியே போகாதபடிக்கும் தடை செய்தனர். அவர்களுக்கென ஒரு சொந்த பாளயம் உண்டாயிருந்தது. அதன் வாசல் அடைப்பட்டிருந்த இரவு நேரத்தில் தான் நிக்கொதேமு வெளியே வந்தான். அவன் அவரை எப்படியாயினும் சந்தித்தான். இன்றைக்கும் அவ்வாறே சம்பவிக்கின்றது. அவர் அவர்களுக்கு அந்நியராக, அயல் நாட்டாராக இருக்கிறார். அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்நாட்களில் இப்படித்தான் சம்பவிக்க வேண்டுமென்று வார்த்தை சாட்சி கூறின போதும், அவர்கள், ''ஏன் இப்படி இருக்க வேண்டும்? ஏன் - அப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்கின்றனர். இதைக் குறித்து நாம் மேலும், மேலும் கண்டு கொண்டே வருகின்றோம். இதுதான் சத்தியம்.“ 50அவர்களுடைய பாளயத்தில் அவர், மூடவைராக்கியம் பொருந்தியவர், அவர்களுடைய பாரம்பரியத்தை உடைத் தெரிகிறவர், அவர்களுடைய சபைகளைக் குழப்புகிறவர், குறி சொல்பவர், 'பெயல்செபூல்' என்றழைக்கப்படும் அசுத்த ஆவியுடன் தொடர்பு கொண்டுள்ளவர் என்று கருதப்பட்டார். “இன்றைக்கு அவர் நம் மத்தியில் காணப்பட்டால், நாமும் அவரை அவ்வாறே கருதுவோம். ஏனெனில் நமக்கும் பாரம்பரியம் ஒன்றுண்டு. நமக்கும் ஸ்தாபனங்கள் உள்ளன. நம்மால் ஒருவருக்கொருவர் ஒத்துப் போக முடியவில்லை, ஏன்? மனிதன் ஒத்து போகக்கூடிய இடம் ஒன்று தான் உள்ளது; அதுதான் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் வார்த்தையாகிய வித்தை உயிர்ப்பிப்பதற்காக அந்த இரத்தம் ஜீவ அணுவாக சிந்தப்பட்டது. அதற்கு வெளிப்புறத்தில் ஸ்தாபனங்களின் தடைகள். ஜனங்கள் அங்கு சேராதடிக்கு ஸ்தாபனங்கள் எப்பொழுதும் தடை செய்து கொண்டிருக்கும். 51இன்றைக்கும் அவர் அந்நியராகத்தான் தென்படுவார். இன்றைக்கும் அவர் அவ்வாறே அழைக்கப்படுவார். அவர் பாளயத்திலிருந்து புறம்பாக்கப்படுவார். உங்களுக்குத் தெரியுமா? ''அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார். அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற் போனோம்'' என்று வேதம் கூறியிருக்க... தீர்க்கதரிசியும், ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? என் கைகளையும், கால்களையும் உருவாக்குத்தினார்கள்.'' என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாடியிருக்க, இந்தப் பாட்டை அவர்கள் ஜெப ஆலயங்களில் பாடிக்கொண்டே, அவர்கள் ஆராதிப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அதே தேவனை - அந்த பலியை - சிலுவையிலறைந்தார்கள். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. அதே தேவன். 52ஆமோஸ் தீர்க்கதரிசி சமாரியாவுக்கு வந்த போது என்ன கூறினான் என்று பாருங்கள். பாவம் நிறைந்திருந்த அந்த பட்டினத்தை அவன் கண்ட போது; பெண்கள் மனிதருடன் பகிரங்கமாக தெருக்களில் படுத்துக் கொண்டிருந்தனர் — நவீன அமெரிக்கா... அதை அவன் கண்டபோது அவன் கண்கள் குறுகிப்போயின. அவனுக்காக கூட்டங்கள் ஒழுங்கு செய்வோர் யாரும் அங்கில்லை. அவனிடம் ஐக்கியச் சீட்டும் இல்லை. தேவன் அவனை அனுப்பியிருந்தார். அவனுடைய செய்தியை ஜனங்கள் கேட்பார்களா? இல்லை, அவர்கள் கேட்க மறுத்தனர். ஆயினும் அவன், “நீங்கள் சேவிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் அதே தேவன், உங்களை நிர்மூலமாக்குவார்'' என்றான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை நான் கூறுகிறேன். இந்த தேசம் பக்தியுள்ள தேசமென்றும் தன்னை அழைத்துக் கொள்கிறது. ஆனால், அவர்கள் சேவிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் அதே தேவன் அவர்கள் அக்கிரமங்களினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்குவார். அவரை சேவிப்பதாக கூறிக்கொள்ளும் ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் இப் பூமியிலிராதபடி அவர் அழித்துப் போடுவார். ஆகவே, கவனியுங்கள். அவர் அவர்களைக் கடிந்து கொண்டார், அவர்கள் அவரைப் பாளயத்திற்கு புறம்பாக்கினார்கள். இயேசு பாளயத்துக்குப் புறம்பே பாடுபட்டார். அவர்கள் அவரைப் பாளயத்திற்குப் புறம்பாக்கினார்கள். ஏனெனில், அவர் அவர்களுடைய பாளயத்துக்கு அப்பாற்பட்டவராயிருந்தார். இந்தக்கடைசி நாட்களில், லவோதிக்கேயா சபையின் காலத்தில், அவர்கள் அதையே செய்வார்கள் என்று வேதம் உரைப்பதை நாம் காண்கிறோம். அவர்கள் அவரை பாளயத்திற்குப் புறம்பாக்குவார்கள் (இப்பொழுது முடிக்கப் போகின்றேன். அவர் நம்மை என்ன செய்யச் சொல்கின்றார் என்பதைக் கவனியுங்கள்) - பாளயத்துக்குப் புறம்பான ஸ்தலத்தில், பலி சுட்டெரிக்கப்படும் இடத்திற்கு, அவர் வெளியேற்றப்பட்டார். அதுதான் அவருடைய ஸ்தலம். ஏனெனில், அவரே பலி. 53சகோதரனே, சகோதரியே நீங்கள் ஒவ்வொருவரும் கூட தியாகபலி செலுத்த வேண்டும் என்பதை அறிவீர்களா? நீங்கள் தேவனுடைய பலியாக அமைந்திருந்து, இவ்வுலகிலுள்ள காரியங்களைத் தியாகம் செய்து, இவ்வுலகம் அளிக்கும் இன்பங்களை புறக்கணிக்க வேண்டியவர்களாயிருக்கின்றீர்கள். ஜனங்கள் அவ்விதம் செய்யாததன் காரணம் என்ன தெரியுமா? ஒரு செம்மறியாட்டினிடம், அதன் உரோமத்தைத் தவிர, அளிப்பதற்கு வேறொன்றுமில்லை. இந்த ஆண்டு அது உரோமம் உற்பத்தி செய்ய வேண்டுமென்று யாரும் அதனிடம் கூறுவதில்லை. இயற்கையாகவே உரோமம் அதில் தோன்றுகின்றது. அவ்வாறே நாமும் ஏதாவதொன்றை உற்பத்தி செய்ய வேண்டுமென்று நம்மிடம் கூறப்படுவதில்லை. ஆவியின் கனிகள் நம்மில் இயற்கையாகவே காணப்பட வேண்டுமென்று தான் கூறப்படுகின்றது... அதுதான் செம்மறியாட்டின் உட்பாகம்... அதன் உள்ளில் என்ன இருக்கின்றதோ, அது வெளிப்புறத்தில் உரோமம் உண்டாவதற்கு ஏதுவாயுள்ளது. அதுபோன்று, ஒரு மனிதன் கிறிஸ்துவை தனக்குள் பெற்றிருந்தால், அது வெளிப்புறத்தில் அவனைக் கிறிஸ்துவைப் போல் ஆக்குகின்றது - செயற்கையான பாவனையல்ல. சரி, கிறிஸ்து மறுபடியும் வரும்போது, அவரை எவ்வாறு நடத்துகின்றனர்? தொடக்கத்தில் நடத்தினது போலவே. அது என்றென்றைக்கும் அவ்வாறே இருக்கும். 54அவர்களை அவர் கடிந்து கொண்டதால், அவர்களுடைய பாளயத்திலிருந்து அவரைப் புறம்பாக்கி, அவரைப் பாவியாக்கினர். அவர் நமக்காக பாவமானார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு - ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு பின்பு - அவர் வாக்குரைத்தபடி இந்தக் கடைசி நாட்களில் அவர்களுடைய பாளயத்துக்கு அவர் மறுபடியும் விஜயம் செய்கிறார். அவர் தம்முடைய காலத்தில் செய்தது போன்று, மோசேயின் காலத்தில் செய்தது போன்று இன்றைக்கும் தமது வார்த்தையை வெளிப்படுத்த அவர் பாளயத்துக்கு விஜயம் செய்கிறார். மோசே அவ்விதம் செய்யவில்லை. அவன் ஒரு மனிதன். கிறிஸ்துவே அவன் காலத்தில் அவ்வாறு செய்தார். 55யோசேப்பின் வாழ்க்கையை கவனியுங்கள். அவன் தன் பிதாவினால் சிநேகிக்கப்பட்டான். தன் சகோதரரால் பகைக்கப்பட்டான். ஏனெனில், அவன் தரிசனம் காண்பவனாக இருந்தான். அவர்கள் அவனைக் காரணமின்றி பகைத்தனர். அவன் தரிசனம் காண்பவன் என்னும் ஒரே காரணத்திற்காக அவர்கள் அவனைப் பகைத்தனர் —- இன்றுள்ள நிலைக்கு பரிபூரண முன்னடையாளம். மீண்டுமாக சபை ஆவிக்குரிய காரியங்களைப் பகைக்கிறது. யோசேப்பு ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டானென்றும், அவன் மரித்தவனாக கருதப்பட்டானென்றும், அவன் குழியிலிருந்து எடுக்கப்பட்டு, பின்பு சிறையில் போடப்பட்டானென்றும், இயேசு சிலுவையில் தொங்கின விதமாக அங்கு ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான். ஒரு மனிதன் இரட்சிப்பை இழந்தானென்றும், அங்கிருந்து அவன் விடுவிக்கப்பட்டு, பார்வோனின் வலதுகரத்திற்கு கொண்டு போகப்பட்டான் என்றும் நாம் பார்க்கிறாம் —- இயேசு செய்த அதேவிதமாக. 56தாவீது புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக தெருக்களில் நடந்து சென்று. மலையின் மேல் உட்கார்ந்து கொண்டு, எருசலேமுக்காக அழுதான். அது தாவீதல்ல. சில நூற்றாண்டுகள் கழித்து தாவீதின் குமாரன், தமது ஜனங்களின் மத்தியில் புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக, அதே மலையின் மீது அமர்ந்து அழுதார். அது எக்காலத்தும் கிறிஸ்துவே. இன்றைக்கும் கிறிஸ்து மறுபடியும் பாளயத்துக்கு வர வேண்டுமென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது என்ன நடக்கும் தெரியுமா? அன்று போல் இன்றும் நடக்கும். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேவனுடைய வார்த்தை நிறைவேற வேண்டுமென்பதற்காக, அது அவ்வாறே நிகழ வேண்டும். நோவாவின் காலத்தில் கிறிஸ்து இருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதுதான் நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்து - அந்தந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட வார்த்தை. 57கவனியுங்கள், அவர் கடைசி காலத்தில் வந்தபோது வெளிப்படுத்தல் 3ல் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது போலவே அவர் இந்தக்கடைசி நாட்களில் வந்தார். லவோதிக்கேயா சபையின் நிலை எப்படியிருப்பதாக அவர் கண்டார்? அது ஐசுவரியமுள்ளதாய், ஒரு குறையும் இல்லாததாய், ராணியைப் போல் வீற்றிருந்து துன்பம் ஏதும் அனுபவியாமல், அவரை சபையினின்று புறம்பே தள்ளி, அவரால் எவ்வித உபயோகமுமில்லையெனக் கருதுகிறது. அவர் மறுபடியும் பாளயத்துக்குப் புறம்பே சென்றுவிட்டார். அவள் நிர்வாணமாயும், குருடாயும் பரிதபிக்கப்படதக்கவளாயுமிருப்பதை அறியாமலிருக்கிறாள். அன்று வந்தது போலவே இன்றும் அவர் வந்திருந்தால், குட்டை கால் சட்டை அணிந்துள்ள பெண்களை அவர் கடிந்து கொள்வார், கூந்தலைக் கத்தரித்துள்ள பெண்களையும் முகத்தில் வர்ணம் தீட்டியுள்ள பெண்களையும், இவ்வாறு தங்கள் மனைவிகள் செல்ல அனுமதிக்கும் சிறுபான்மையுள்ள ஆண்களையும் அவர் கடிந்து கொள்வார். மட்டுமின்றி அங்குள்ள எல்லா ஸ்தாபனங்களையும் அவர் கிழித்தெறிந்து, எல்லா மனித பிரமாணங்களையும் உடைத்துப் போடுவார். அவர் அப்படி செய்வாரென்று விசுவாசிக்கிறீர்களா? அவர் நிச்சயம் செய்வார்! அது உண்மை: அவர்கள் அவருக்கு என்ன செய்வார்கள்? அவரைப் பாளயத்துக்குப் புறம்பே தள்ளிவிடுவார்கள். அவர்கள் நிச்சயமாக அவருடன் ஒத்துழைக்க மாட்டார்கள், இல்லை ஐயா! 58வேதம் கூறின விதமாக, இந்நாட்களில் அவரை மறுபடியும் பாளத்துக்குப் புறம்பே தள்ளிவிட்டதை நாம் காண்கிறோம். அவர் என்றென்றும் வார்த்தையாயிருக்கிறார் - அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவரை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுடைய ஆலோசனை சங்கம் அவரைப் புறக்கணித்துவிட்டது. அன்று அவரை விசாரணைக்கு நிறுத்தியது போல் இன்றும் நிறுத்தினால் நலமாயிருக்குமென்று அவர்கள் கருதுகின்றனர். இன்று வார்த்தையானது விசாரணைக்கு நின்றபோது என்ன நடந்தது? அன்று போலவே இன்றும், அவர்கள் அவரை புறக்கணித்து, கிறிஸ்துவுக்குப் பதிலாக பரபாஸ் என்னும் கொலைக்காரனை ஏற்றுக் கொண்டுள்ளனர். உலக சபை ஆலோசனை சங்கம் (World Council of Churches) அதைதான் செய்யும். இன்று அவர்கள் வார்த்தையையும், இந்நேரத்திற்கான உறுதிப்படுத்தலையும் நிராகரித்துவிட்டு, தேவனுடைய வார்த்தையைக் கொலை செய்யும் பரபாஸாகிய உலக சபை ஆலோசனை சங்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். 59அவருடைய வார்த்தையையும், அவருடைய ஞானஸ்நானத்தையும், அவருடைய வல்லமையையும், அவருடைய அடையாளங்களையும் அவர்கள் நிராகரித்து விட்டு, அதற்குப் பதிலாக தங்களுக்கென சொந்த பிரமாணங்களையும், பாரம்பரியத்தையும் உண்டாக்கிக் கொண்டு, கழுத்துப் பட்டை அணிதல், நற்கிரியைகளில் சார்ந்திருத்தல் போன்றவைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தொடக்கத்திலிருந்தே நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்படவில்லை. விசுவாசிப்பதற்கென அவர்களிடம் ஒன்றுமில்லை. ''என்னை அறிந்தவன் என் பிதாவையும் அறிந்திருக்கிறான். என் பிதா என்னை அனுப்பினது போல், நானும் உங்களை அனுப்புகிறேன்.'' இயேசுவை அனுப்பின தேவன். அவருக்குள் சென்றார். அது போன்று, உங்களை அனுப்பும் தேவன் உங்களுக்குள் செல்லுகிறார். ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (கறுப்பு, மஞ்சள், வெள்ளை, பழுப்பு நிறத்தவருக்கு; யாராயிருந்தாலும் சரி). விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன...'' யாருக்கு? உலகமெங்குமுள்ள சர்வ சிருஷ்டிக்கும். 60அண்மையில் டூசானில் பாப்டிஸ்டு போதகர் ஒருவர் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, இதுதான் உங்களிடம் காணப்படும் தவறு. நீங்கள் இதை அப்போஸ்தலரின் காலமாக மாற்றப் பார்க்கிறீர்கள். இன்று அப்போஸ்தலர் காலமென்பது கிடையாது. அது ஏற்கெனவே முடிவு பெற்றுவிட்டது” என்றார். நான் அப்டியா? எனக்குத் தெரியாதே?“ என்றேன். அவர், “ஆம் முடிவடைந்து விட்டது” என்றார். நான், “நிச்சயமாக அறிவீரா?” என்று கேட்டேன். அவர், “நிச்சயமாக அறிவேன்” என்றார். நான், “அது முடிவு பெற்றுவிட்டது என்று நீர் நினைக்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அவர், “அது அப்போஸ்தலருக்கு மாத்திரமே உரியது” என்றார். நான், “பெந்தெகோஸ்தே நாளன்று பேதுரு கூறின வார்த்தைகளை நீர் விசுவாசிக்கிறீரா?” என்று கேட்டேன். “ஆம், ஐயா” என்று அவர் விடையளித்தார். நான், பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்; வாக்குதத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று கூறினானல்லவா? 61அந்த வாக்குத்தத்தத்திற்கு நாம் மறுபடியும் வர வேண்டியவர்களாயிருக்கிறோம், என்றேன். டாக்டர். சீமோன் பேதுரு ஒரு மருந்தை சீட்டில் எழுதிக் தொடுத்தார். ''கிலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரண வைத்தியனும், அங்கே இல்லையோ?'' என்று வேதம் கூறுகின்றது நீங்கள் மருந்து சீட்டைக் கொண்டு செல்லும் போது... மருத்துவர் உங்கள் தேகத்திலுள்ள வியாதியைக் கண்டு பிடித்து, அந்த மருந்துச் சீட்டை எழுதிக் கொடுக்கும் போது, அதில் எழுதியுள்ள விதமாகவே மருந்தைக் கலக்கிக் கொடுக்கும் ஒரு நல்ல மருந்து தயாரிப்பாளரிடம் நீங்கள் செல்ல வேண்டும். ஏனெனில், உங்கள் தேகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு விஷம், விஷப் பரிகாரம் (Antidote) போன்றவைகளை அறிந்து தான் அந்த மருந்து சீட்டு எழுதப்பட்டுள்ளது. அது ஏற்கெனவே பரிசோதித்து நிரூபிக்கப்பட்டிருப்பதால், நீங்கள் அந்த சீட்டில் எழுதியுள்ள மருந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் நீங்கள் போலி மருத்துவரிடம் சென்றால், அவர் அதனுடன் விளையாடுவார். அந்த மருந்தின் சரியான அளவு என்னவென்று அவருக்குத் தெரியாமலிருக்கலாம். எனவே, அது உங்களைக் கொன்றுவிடும். அவர் மருந்தின் சக்தியை நீர்த்துவிட்டால், அது தேகத்திற்கு எந்தவித சுகத்தையும் அளிக்காது. 62அதுதான் மருத்துவர்களாகிய உங்களில் அநேகர் செய்து கொண்டிருப்பது நீங்கள் அந்த மருந்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பேதுரு, ''உங்களுக்கு கால முடிவு வரைக்கும்முள்ள (Everlasting) மருந்தை தருகின்றேன். அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும். தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். ''வந்து எங்களிடம் சேர்ந்துக் கொள்ளுங்கள்'' என்பதல்ல அது. ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது (அதன் விளைவு, ஆமென்!) பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த மருந்து உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், உண்டாயிருக்கிறது“ என்றான். போலி மருத்துவர்களாகிய நீங்கள் போலி மருந்துச் சீட்டுகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள், ஜனங்களைக் கொன்று விடுகின்றீர்கள். அதன் விளைவாக உண்மையான மருந்து ஜனங்களை அடைவதில்லை. ஆமென்! 63மருத்துவர்கள் எவ்விதம் தங்கள் மருந்துகளைக் கண்டு பிடிக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும்... விஞ்ஞானிகள் ஏதாவதொன்றைக் கண்டு பிடித்து அதை சீமைப் பெருச்சாளிக்குள் (guinea pig) செலுத்தி, இது அடித்துக் கொன்றுவிடுகின்றதா, இல்லையா என்று பார்க்கின்றனர். எனவே, நீங்கள் மருந்து உட்கொண்டால், அது உங்களை குணமாக்கிவிடும், அல்லது கொன்று விடும். ஏனெனில், எல்லோருக்கும் சீமை பெருச்சாளியின் அமைப்பே இருக்க முடியாது. ஆனால் இந்த மருந்தின் விசேஷம், அது எல்லோருக்குமுள்ளது. தன் மருந்தின் மேல் அதிக விசுவாசம் கொண்டுள்ள எந்த ஒரு மருத்துவரும், முதலில் மற்றவர்கள் அதை சாப்பிடும்படி செய்யமாட்டார். அவரே அதை சாப்பிடுவார், சில மருத்துவர்கள் கோழைத்தனமாக இருப்பதால், மரணதண்டனை பெற்றுள்ள கைதிகளுக்கு அதைக் கொடுத்து பரிசோதித்துப் பார்க்கின்றனர். ஆனால் நமக்கோ, உண்மையான வைத்தியர் ஒருவர் இருக்கிறார். 64அவர் இங்கு வந்து, மருந்துச் சீட்டில் எழுதப்பட்டிருந்த அந்த மருந்தை அவரே சாப்பிட்டார். ''நானே இருக்கிறேன், நான் இருப்பேன்'' என்றல்ல. ''நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்“ என்றார் அவர். ''என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக் கும்மரியாமலும் இருப்பான். அவர் மார்த்தாளிடம், ''இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் உலகத்திற்கு வருகிறவரான கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன். மற்றவர் உம்மை எப்படி அழைத்த போதிலும், நீர் யாரென்று உம்மை புரிந்து கொண்டேன்” என்றாள். கல்வாரியில் அந்த ஊசியை அவரே போட்டுக் கொண்டார், ஈஸ்டர் காலையன்று மரணம் அவரைத்தடுத்து நிறுத்த முடியவில்லை. ''நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்,'' அவர்கள் மரணம் என்னும் ஊசியை அவருக்குள் செலுத்தினார்கள். ஆனால் அவரோ, மரணம் நரகம், பாதாளம் என்பவைகளின் மேல் வெற்றி சிறந்து உயிரோடெழுந்தார். அவரே அந்த ஊசியை ஏற்றுக் கொண்டு, அவர் யாரென்பதைக் குறித்த வெளிப்பாடு கொண்டிருந்த சில மருத்துவர்களை, அந்த மருந்தை எழுதிக் கொடுக்கும்படிக்கு அனுப்பினார். “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?” பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். அவர், “சீமோனே, நீ பாக்கியவான், நீ அறிந்து கொண்டு விட்டாய். ராஜ்யத்தின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்றார். 65பெந்தெகோஸ்தே நாளன்று இவையாவும் சம்பவிப்பதைக் கண்ட ஜனங்கள், ''இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அப்பொழுது பேதுரு அவர்களுக்கு அந்த மருந்துச் சீட்டை படித்துக் காண்பித்தான். அவன் அவர்களிடம், ''இப்பொழுது ஒரு மருந்துச் சீட்டை உங்களுக்கு எழுதிக் கொடுக்கப் போகின்றேன். அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். அந்த மருந்துடன் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் மரித்துப் போவீர்கள். அவர்கள் அதை அதிகமாக நீர்க்கும்படி செய்துவிட்டதால் அது ஸ்தாபன தண்ணீராகி விட்டது. (உண்மை!) பிரேதம் கெடாமல் பாதுகாக்கும் தைலத்தை அவர்கள் மரித்தவனுக்குள் செலுத்தி, அவனை மரித்தவனாகவே ஆக்கிவிடுகின்றனர். ஓ, ஆனால் சகோதரனே, உண்மையான அபிஷேகம் ஒன்றுண்டு. கிலேயாத்தில் பிசின் தைலம் உள்ளது. அது ஆத்துமாவை சுகப்படுத்துவதற்கெனவே உள்ளது. சீட்டில் எழுதப்பட்டுள்ள அந்த மருந்துடன் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். எழுதப்பட்ட விதமாகவே அதை உட்கொள்ளுங்கள். தேவன் தமது வார்த்தைக்குக் கடமைப்பட்டவராயிருக்கிறார். மனிதனின் பிரமாணங்களுக்கோ அல்லது கோட்பாடுகளுக்கோ அல்லது ஸ்தாபனங்களுக்கோ அவர் கடமைபட்டவரல்ல. அவர் வார்த்தைக்கு கடமைபட்டவராயிருக்கிறார் மருந்து சீட்டில் எழுதியுள்ளதைப் பின்பற்றுங்கள். அதுதான் முதலாம் அடிப்படை அங்கிருந்து தொடங்குங்கள். அப்பொழுது நீங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு, வேலைக்குச் செல்ல ஆயத்தமாயிருப்பீர்கள். கவனியுங்கள், பாளயத்துக்குப் புறம்பாக்கிவிட்டார்கள். 66இன்று அவர்கள் ஒரு பரபாஸை தெரிந்து கொண்டுள்ளனர். சுவிசேஷமானது உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சென்று, அந்த எழுப்புதலை அற்புதங்களும், அடையாளங்களும் பின் தொடர்ந்த பின்பும், அதற்குள் வருவதற்குப் பதிலாக அவர்கள் பரபாஸ்டன் சேர்ந்து கொண்டனர். ''இந்த அர்த்தமற்ற காரியங்கள் சபைக்குள் நுழைவதற்கு முன்பாக... நாம் மற்றவரை போல பழைய முறைகளைப் பின் பற்றுவோம்'' என்கின்றனர் இப்பொழுது ரோமாபுரியும் மற்ற அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர் - ஒரு பரபாஸ். கவனியுங்கள், நாம் அந்த பாளயத்துக்குள் இருப்போமேயானால். 67அதற்குப் புறம்பே செல்லும்படி அழைப்பைப் பெற்றுள்ளோம். “அந்தப்படியே இயேசுவும், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால் (கவனியுங்கள்), நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டு போகக்கடவோம்” அவர் எதற்காக நிந்தைபட்டார்? அவர் மெதோடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் என்பதனால்ல. அதை நான் நிச்சயமாக உங்களுக்குக் கூறமுடியும். அவர் பரிசேயர் அல்லது சதுசேயர் என்பதனாலல்ல. அவர் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார் என்பதனால் மாத்திரமே. “அவருடைய நிந்தையைச் சுமந்து...'' எதற்காக உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தைக்காக, அது உண்மை. அதைதான் அவர் செய்தார். அவர், ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாமற் போனால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம். ''வேத வாக்கியங்களிலுள்ள கேள்விகள் அனைத்திற்கும் நான் பதிலாய் இராமற் போனால்...” 68பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து. அது முற்றிலும் உண்மை (நான் இப்பொழுது கூறினது போன்று, சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு கூட்டத்தில்; ஒருக்கால் இங்கு இருக்காது) ''பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து'' நான் அணில் - வேட்டைக்குச் சென்றிருந்த அன்று காலை - உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அந்த மலையின் மேல் மூன்று தண்டுகள் ஒன்றாக ஒரு தண்டில் கூடின. நான் நின்று கொண்டு அதை உற்றுப் பார்த்தேன். நான் அருகில் சென்று என் தொப்பியைக் கழற்றி, என் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டேன். ''நான் எழுந்த போது ஒரு சத்தம் உண்டாகி அந்த காட்டையே அசைத்தது. அது என்னிடம், பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து. உண்மையாயிரு'' என்றது. அதற்கு சரியாக கீழே தான் அணில்கள் தோன்றின - சிருஷ்டிக்கப்பட்டன். அதற்கு முன்பு அங்கு ஒரு அணிலும் இருக்கவில்லை. பாருங்கள்? அது உண்மை. பாருங்கள்? அது உண்மை. தேவன் அறிவார். அது சாத்தியமென்று அவருக்கு முன்பாக நின்று கொண்டு அறிக்கையிடுகிறேன். அது உண்மை. அது சத்தியம். கென்டக்கியில்... அந்த சத்தம் மறுபடியும் உண்டான போது, அங்கிருந்தவர்கள் இன்றிரவு இங்குள்ளனர். ஆம், அது உண்மையென்பதை நாமறிவோம். பழைய ஏற்பாட்டின் யேகோவாவே, புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து... 69சீன மக்கள் முதன் முதலாக இங்கு வந்து குடியேறின போது, அவர்களுக்கு நமது மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரியாமலிருந்தது. அவர்கள் சிறந்த துணி சலவைக்காரர்கள் சீனர்கள் வைத்திருந்த சலவை சாலைகளுக்கு நீங்கள் செல்வீர்களானால், அவர்கள் பழைய வெள்ளை காகிதத் துண்டை வைத்திருப்பார்கள். அந்த சீனனுக்கு ஒரு எழுத்தும் கூட படிக்கத் தெரியாது என்பதை அவனறிவான், எனவே நீங்கள் அங்கு சென்றால், அவன் ஒரு காகிதத்துண்டை எடுத்து, ஒரு பிரத்தியேக முறையில் கிழிப்பான் - இந்த இடத்தில் கிழிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் ஒரு துண்டை உங்களிடம் கொடுத்துவிட்டு, மற்ற துண்டை வைத்துக் கொள்வான், நீங்கள் மறுபடியும் சலவை சாலைக்குள் வரும்போது அவன், ''உங்கள் காகிதத் துண்டை பார்க்கலாம்'' என்று கூறிவிட்டு அதை வாங்கிக் கொள்வான். அவன் வைத்துள்ள காகிதத் துண்டுடன் அது பொருந்தினால், சலவைத் துணிகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அவ்விதமாகவே, “பழைய ஏற்பாட்டின் யேகோவாவே, புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து என்பதற்குரிய ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் இயேசுவில் பொருந்தினது. அவர் எல்லாவற்றையும் பொருத்திக் காண்பித்தார். நான் தேவ பக்தியுடனும், மரியாதையுடனும், அன்புடனும், உத்தமத்துடனும் நான் எங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்தவனாய் இதை கூற முற்படுகிறேன். இந்நேரத்திற்கென்று அளிக்கப்பட்ட செய்தியானது. இந்த நேரத்தைக் குறித்து வேதம் என்னென்ன கூறியுள்ளதோ, அதனுடன் பொருந்துகின்றது. உங்களிடம் அழுக்கு துணிகள் இருந்தால், இங்கு கொண்டு வாருங்கள். நீங்கள் ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கின்றீர்களா? 70கவனியுங்கள். அவருடைய நிந்தையைச் சுமந்து; ஏனெனில் அவரே உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை. அன்று போல் இன்றும் உள்ளது. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிரக்கிறார். எபிரெயர்.13:12,13 வசனங்களில் காணலாம். எபிரெயர்.13:8லும் கூட. சுவிசேஷத்தின் காரணமாக அவர் பெற்ற அவமானத்தைச் சுமந்து அவருடைய நாமத்தைச் சுமந்து... ''அவர் நான் என் பிதாவின் நாமத்தில் வந்தேன்'' என்றார். பிதாவின் நாமம் என்ன? அவர் பிதாவின் நாமத்தில் வந்தார். ''நான் என் பிதாவின் நாமத்தில் வந்திருந்தும், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று அவர் கூறினார். சரி, பிதாவின் நாமம் என்ன? உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாருங்கள்?வார்த்தையினிமித்தம் ஏற்பட்ட நிந்தையை நீங்கள் சுமந்தவர்களாய் அது எப்பொழுதும் அவர்களுடைய பாளயத்துக்குப் புறம்பேதான் சுமந்து செல்லப்படுகின்றது. அவர்கள் அதைப் புறம்பாக்கிப் போட்டார்கள். நீங்கள் எள்ளி நகைக்கப்பட்டு, பரியாசம் செய்யப்படுவீர்கள். 71நான் முதன் முதலாக இந்நாட்டில் பிரசங்கம் செய்யத் தொடங்கின போது, நான் என்னைக் குறித்து பேசிக் கொள்கிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். பிரசங்கத்திற்காக இன்று எனக்களிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. நான் எழுதிவைத்துள்ள குறிப்புகளில் இன்னும் பத்து பக்கங்கள் மீதியுள்ளன. இன்னும் எவ்வளவு மீதமுள்ளது என்பதை நீங்கள் காணலாம் (பார்த்தீர்களா? பார்த்தீர்களா? சரி). கவனியுங்கள், முதலில் தொடங்கின போது... இயேசு முதலாவதாக தொடங்கின போது, கவனித்தீர்களா? “ஓ, அந்த வாலிபர். ஓ, அவர் அற்புதமானவர். இங்கு வாருங்கள், இங்கு வந்து பிரசங்கம் செய்யுங்கள்,” என்றெல்லாம் அவர்கள் வருந்தியழைத்தனர். ஆனால் ஒரு நாள் அவர்களிடம் அவர், “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை” என்றார். அப்பொழுது கூட்டத்திலிருந்த மருத்துவர்களும், அறிவாளிகளும் என்ன நினைத்தார்கள் என்று நினைக்கின்றீர்கள்? “இந்த மனிதன் இரத்தத்தை உறிஞ்சும் பூதம் (Vampire) பாருங்கள்?” அவன் உங்களை இரத்தத்தைக் குடிக்கச் சொல்கிறான், எங்களால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது. எங்களை விட்டு அகன்று போ. அப்பொழுதே ஆசாரியர்கள் அவனைப் பைத்தியக்காரன் என்றனர். இப்பொழுது நான் அதை நம்புகிறேன்“ என்றனர். 72அதன் பின்பு அவர் எழுபது போதகர்களை நியமித்தார். ஒரு நாள் அவர் அவர்களிடம், ''சரி, மனுஷகுமாரன் தான் முன்பிருந்த இடத்திற்கே ஏறிபோனால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?“ என்று கேட்டார். இவைகளுக்கு அவர் விளக்கம் தரவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டார். பாருங்கள்? அவர்களோ, “என்ன? இவர் மனுஷகுமாரனா? இவரோடு நாங்கள் புசித்தோம்; இவரோடு நாங்கள் மீன் பிடித்தோம். இவரோடு நாங்கள் ஆற்றங்கரையில் படுத்திருந்தோம். அவர் குழந்தை பருவத்தில் படுத்திருந்த தொட்டிலை நாங்கள் கண்டிருக்கிறோம், அவருடைய தாயாரை எங்களுக்குத் தெரியும். அவருடைய சகோதரனை எங்களுக்குத் தெரியும். இதை யார் ஏற்றுக்கொள்ள முடியும்?'' என்றனர். அன்று முதல் அவர்கள் அவருடன் கூட நடக்கவில்லையென்று வேதம் கூறுகின்றது. 73பின்பு அவர் பேதுருவையும், மற்றவர்களையும் நோக்கி, ''பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா...'' ஆயிரக்கணக்கான பேர்களில் பன்னிருவரை மாத்திரம் அவர் தெரிந்து கொண்டார். அவர், ''பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்'' என்றார். ''அது எனக்கு ஆதிமுதற் கொண்டே தெரியும்'' என்றார். அவர், ''நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்று கேட்டார். ''அவர்களைக் கெஞ்சி, தட்டிக் கொடுத்து, என் சபையைச் சேர்ந்து கொண்டால், உன்னை மூப்பனாக்குவேன்'' என்று சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கில்லை. அவருக்கு யாருடைய தயவும் தேவையில்லை. அவர் கூறினவைகளுக்கு சீஷர்களும் கூட விளக்கம் கூற முடியவில்லை. அவர் அவர்களை நோக்கி, “நான் உங்களை உலகத் தோற்றத்துக்கு முன்பே அறிவேன். என்னுடன் கூட சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள உங்களை நியமித்தேன்” என்றார். பாருங்கள்? உலகத் தோற்றத்துக்கு முன்னால் முன் குறிக்கப்பட்டவர்கள். 74இந்த அப்போஸ்தலர்கள் உறுதியாய் நின்றனர். அவர்கள் எப்படி அவருடைய மாமிசத்தை புசித்து அவருடைய இரத்தத்தை பானம் பண்ணப் போகின்றனர் என்று அவர்களால் விளக்கம் - கூற முடியவில்லை. அவர்களுடன் அவர் எப்பொழுதும் இருந்திருக்க, அவர் எப்படி வானத்திலிருந்து இறங்கி வந்தார் என்பதையும், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களால் விளக்கம் கூற முடியவில்லை. யாருக்கும், விளக்கம் கூறமுடியவில்லை. ஆயினும் பேதுரு அந்த குறிப்பிடத்தக்க சொற்களைக் கூறினான், அவனிடம் அவர் திறவு கோல்களைக் கொடுத்ததில் வியப்பொன்றுமில்லை. அவன் “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நீர் ஒருவர் மாத்திரமே இக்காலத்திற்கென வாக்குதத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையை நிரூபணம் செய்கிறவராயிருக்கிறீர் என்பதை நாங்கள் முற்றிலும் நம்புகிறோம். நித்திய ஜீவ வசனம் உம்மிடத்தில் மாத்திரமேயுண்டு என்று நாங்கள் அறிகிறோம், எங்களால் இவைகளுக்கு விளக்கம் தர முடியாது, ஆயினும் நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்” என்றான். 75மார்த்தாள், ''என் சகோதரன் மரித்துப் போனான் அவன் கல்லறையில் கிடக்கிறான். அவன் அழுகி நாற்றமெடுத்துவிட்டான். ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ, அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.'' ஓ, என்னே! அவர், நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும், என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா? என்றார். (யோவான்.11:25-26). அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, இதை என்னால் விளக்க முடியாது. ஆயினும் நான் அதை விசுவாசிக்கிறேன். நீரே உலகத்தில் வருகிறவரான கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன். அதற்கான தகுதியை நீர் பெற்றிருக்கிறீர் என்று வேத வாக்கியங்களின் மூலமாக அறிகிறேன்” என்றாள். அவர், “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்றார். ஓ, என்னே! அங்கு ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது. எல்லா சக்கரங்களும், சரியான நேரத்தில் ஒன்றோடொன்று இணைகின்றன. பாருங்கள்? அவர் கல்லறைக்கு நடந்து சென்றார், “நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்பதாய் வேதம் உரைக்கின்றது ஒருக்கால் அவர் சற்று தோள்கள் சரிந்துள்ள மனிதனாக இருந்திருக்கக்கூடும். தோள்கள் சரிந்த வண்ணம், நடந்து வந்ததன் காரணமாக அவர்களைப் புற்றவராக இருந்திருப்பார். அவர் “லாசருவே, வெளியே வா” என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார், அப்பொழுது மரித்து நான்கு நாட்களாகிய அந்த மனிதன் எழுந்து நின்றான். 76கிறிஸ்தவ விஞ்ஞானம் என்னும் குழுவைச் சேர்ந்த ஒரு ஸ்திரீ... உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள். நான் அவ்விதம் செய்ய நினைக்கவில்லை. கிறிஸ்தவ விஞ்ஞானப் பெண்மணி ஒரு நாள் இந்த சபையில் என்னைச் சந்தித்து, “திரு. பிரன்ஹாமே, உங்கள் பிரசங்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், ஒரு காரியத்தை மாத்திரம் நீங்கள் மிகைப்படுத்துகின்றீர்கள்” என்றார்கள். நான், “அது என்ன?” என்று கேட்டேன். ''நீங்கள் இயேசுவைக் குறித்து மிகவும் பெருமையடித்துக் கொள்கிறீர்கள்'' என்றார்கள். ''அது ஒன்றுதான் அவருக்கும் கூட என் மேலுள்ள குற்றச்சாட்டு என்று நினைக்கிறேன்“ என்று பதிலுரைத்தேன். அந்த ஸ்திரீ, “நீங்கள் அவரைத் தேவனாக்கி விடுகின்றீர்கள்” என்றார்கள். பாருங்கள், அவருடைய தெய்வீகத்தை அவர்கள் நம்புவதில்லை. அவர் ஒரு சாதாரண மனிதர், ஒரு நல்ல ஆசிரியர், தத்துவம் போதிப்பவர் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். “அவரைத் தேவனாக்கி விடுகிறீர்கள். அவர் தேவனல்ல” என்றார்கள்... நான், “ஓ, அவர் தேவன் தான்” என்றேன். அந்த அம்மாள், “உங்களுடைய வேதாகமத்தைக் கொண்டே அவர் தேவனல்ல என்று நிரூபித்தால் நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். நானோ அவர்களிடம், “அவர் தேவனென்று என் வேதம் உரைக்கிறது. நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். அவர் தேவன் தான்” என்று பதிலுரைத்தேன். அவர்கள், “இயேசு லாசருவின் கல்லறைக்கு சென்று கண்ணீர் விட்டார் என்று வேதம் யோவான்;11ம் அதிகாரத்தில் உரைக்கின்றது” என்றார்கள். “அதனால் என்ன?” என்று கேட்டேன். “அவர் தேவனல்ல என்பதை அது காண்பிக்கிறது'' என்றார்கள். நான் அவர்களிடம், ''அந்த மனிதன் யாரென்பதை நீங்கள் கண்டுகொள்ளத் தவறிவிட்டீர்கள். அவர் ஒருங்கே தேவனும் மனிதனுமாயிருந்தார். அவர் மனிதனாகக் கண்ணீர் விட்டு அவர்களுடையதுயரத்தில் பங்கு கொண்டார். ஆனால், அவர் அங்கு நின்று கொண்டு, ''லாசருவே, வெளியே வா!'' என்று உரக்க சத்தமிட்ட போது, மரித்து நான்கு நாட்களான மனிதன் உயிரோடெழுந்து காலூன்றி நின்றான் என்றால், அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவர்'' என்றேன். ஆம், ஐயா! ஆம், உண்மையாக. 77நான் அடிக்கடி இதைக் கூறியிருக்கிறேன். அவர் அன்றிரவு பசியுள்ளவராக மலையிலிருந்து இறங்கின போது, அவர் மனிதனாயிருந்தார். அடுத்த நாளும் அவர் பசியாயிருந்த போது, அவர் மனிதன் தான் ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேர்களைப் போஷித்த பின்பு, மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்களே; அப்பொழுது அவர் மனிதனைக் காட்டிலும் உயர்ந்தவராக இருந்தார். ஆம், ஐயா! சிலுவையில், ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்?'' என்று அவர் கதறின போது, அவர் மனிதனாயிருந்தார். அவர் “தாகமாயிருக்கிறேன்” என்ற போது, அவர்கள் கசப்பில் காடியைக் கலந்து குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது அவர் கதறும் மனிதனாயிருந்தார். ஆனால், ஈஸ்டர் காலையன்று அவர் மரணம், நரகம், பாதாளம் என்பவைகளின் முத்திரைகள் அனைத்தையும் தகர்த்தெரிந்த போது, அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவராயிருந்தார். 78அன்றிரவு அவர் சீஷர்களுடன் சென்றிருந்த போது, படகின் அடித்தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாரே! அப்பொழுது அவர் மனிதனாயிருந்தார். அவரை மூழ்கடிக்க வேண்டுமென்று பத்தாயிரம் பிசாசுகள் சபதம் செய்திருந்தன. அந்த சிறிய படகு, குப்பியின் மூடி போன்று அங்கு மிதந்து கொண்டிருந்தது. அவர் மிகவும் களைப் புற்றிருந்தபடியால், உறக்கத்தினின்று எழுந்திருக்கவில்லை. அவர் உறங்கின போது, மனிதனாயிருந்தார். ஆனால், அவர் படகின் தளத்தின் மேல் கால் வைத்து மேல் நோக்கி, ''அமைதியாயிரு'' என்று அதட்டின போது, காற்றும் கடலும் அவருக்குக் கீழ்படிந்ததே; அப்பொழுது அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவராயிருந்தார். அது தேவன்! கவிஞர் இவ்விதம் பாடினதில் வியப்பில்லை. “ஜீவனோடிருந்த போது அவர் என்னை நேசித்தார்; மரித்து என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்டு என் பாவத்தை வெகு தூரம் சுமந்து சென்றார். உயிரோடெழுந்து, என்றென்றைக்கும் நீதிமானாக்கப்பட்டார். ஒரு நாளில் அவர் வருவார். ''ஓ, மகத்தான நாள்.'' ஆம், ஐயா! பாளயத்துக்குப் புறம்பே செல்லுங்கள். அதற்காக என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை. இந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலுவையை சுமப்பேன் மரணம் என்னை விடுதலையாக்கும் வரைக்கும் பின்பு, வீடு சென்று கிரீடம் தரித்துக் கொள்வேன், அங்கு எனக்காக ஒரு கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. 79முடிப்பதற்கு முன்பு இதைக் கூறிட விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு நீதிபதி ஒருவரைக் குறித்த கதையொன்றை படித்துக் கொண்டிருந்தேன். அவர் நீதியுள்ளவர், நல்லவர் எல்லோராலும் சிநேகிக்கப்பட்டவர். அவர் வாழ்ந்து வந்த பட்டினத்தில், எதையும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்த ஒரு கூட்டம் ஜனங்கள் குடியிருந்தனர். அவர்களிடம் ஏராளமான பணம் இருந்தது. அவர்கள் வேசி விடுதி ஒன்றையும், மதுக்கடையும் திறந்தனர். அக்கூட்டத்தின் தலைவன் போலீஸ்காரர் ஒருவரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு வரப்பட்டான். அச்சிறு பட்டணத்தில் வாழ்ந்த அனைவருமே அங்கு குழுமியிருந்தனர். இந்த மனிதன் வேசி விடுதி நடத்துதல் போன்ற அநேக சட்ட விரோதமான காரியங்களைச் செய்துள்ளான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவன் குற்றவாளியென்று நீதி மன்றத்தில் வழக்கின் முடிவை அறிவிக்கும் குழு தீர்ப்புக் கூறினர் ஏனெனில் அவன் கையுங்களவுமாக பிடிக்கப்பட்டான். நீதிபதியும் அவன் குற்றவாளியென்று தீர்ப்பு கூறி அவனுக்கு அநேக ஆண்டுகள் கடுங்காவல் விதித்தார். அவன் மேல் முறையீடு செய்யவும், ஜாமீனில் வெளிவரவும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டு, அவனைச் சிறைக்கு அனுப்பினார். ஏனெனில் சட்டப்பிரகாரமாக அதுதான் அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தீர்ப்பாகும். 80நீதிமன்றத்தில் குழுமியிருந்த ஜனங்களின் சிலர் நீதிபதியையணுகி, “என்ன நடக்கும் தெரியுமா? இப்பட்டினத்திலுள்ள அனைவரும் நீர் கூறின் தீர்ப்புக்காக உம்மை வெறுப்பார்கள்'' என்றனர். அவர்கள் சூதாட்டக்காரர்கள். ”நாங்கள் எல்லோரும் உம்மை எதிர்ப்போம். மறுபடியுமாக உம்மைத் தேர்ந்தெடுக்க மாட்டோம். நாங்கள் யாருமே உமக்குவாக்கு (Vote) அளிக்கப் போவதில்லை'' என்றனர். அவர் தெருவில் நடந்து சென்ற போது, அவரை கேலி செய்தனர். அவரோ நின்று அவர்களை நோக்கி, “சற்று பொறுங்கள். உங்களிடம் சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். என் கடமையை நான் தவறாமல் செய்தேன். அந்த மனிதன் குற்றவாளி. எனவே அவன் யாராயிருந்தாலும், சட்டத்தைக் காப்பாற்றுவேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்த அந்த வாக்கை நிறைவேற்ற வேண்டியவனாயிருக்கிறேன்” என்றார். அவர்களோ, “இந்தப் பட்டினத்திலுள்ளவர்களால் நீர் வெறுக்கப்படுகின்றீர்” என்றனர். அவர், ''ஆனால் என் வீட்டிலுள்ள மக்களால் நான் சிநேகிக்கப்படுகிறேன்'' என்று விடையளித்தார். நாமும் அவ்விதமே சிந்திக்க முற்படுவோமாக. நான் எதைச் செய்ய வேண்டுமென பதற்காக இரட்சிக்கப்பட்டேனோ அதாவது தேவனுடைய வார்த்தையைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக - அதற்காக நான் உறுதியாய் நின்று வந்திருக்கிறேன். நான் கூறுபவைகளுக்காக ஸ்தாபனங்கள் என்னை வெறுக்கின்றன என்று எனக்குத் தெரியும். ஆனால் தேவனுடைய வீட்டில் அவருடைய மக்களின் மத்தியில், நான் அதிகமாக நேசிக்கப்படுகிறேன். இவ்விதம் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். நாம் ஜெபம் செய்வோம்! 81கர்த்தராகிய இயேசுவே, ஒருக்கால் இவ்வுலகத்தாரால் நாங்கள் வெறுக்கப்படலாம். ஆனால் நாங்கள் பிதாவினால் சிநேகிக்கப்படுகிறோம். அன்புள்ள தேவனே, எங்களுக்கு உதவி புரியும். இங்குள்ள ஒவ்வொருவருக்கும், ஆண்டவரே, நீர் உதவி செய்து உம்முடைய ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் தங்கியிருக்கட்டும். இப்பொழுதே அவர்கள் பாளயத்துக்கு புறம்பே செல்வார்களாக! எங்களுடைய சுய சிந்தைக்கு அப்பால் நாங்கள் செல்வோமாக! தேவனுடைய சிந்தையையே நாங்கள் அனுசரித்து செல்வோமாக! ''கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று வேதம் உரைக்கின்றது.'' எனவே நாங்கள் எங்கள் நினைவுகளை சிந்திக்காமல், தேவனுடைய சிந்தையையே சிந்திப்போமாக! ஏனெனில், நாங்கள் பெரும்பாலும் எங்கள் சிந்தனைகளில் தவறுள்ளவர்களாயிருக்கிறோம். எனவே, நாங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்க உமது சிந்தை எங்களில் தங்கியிருக்கட்டும். பிதாவின் சித்தத்தை செய்வதே அவருடைய சிந்தையாயிருந்தது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையே பிதாவின் சித்தம். ஆண்டவரே, இன்றிரவு நாங்கள் பாளயத்துக்குப் புறம்பே சென்று இயேசுவைக் கண்டு கொள்வோமாக. ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொள்வதால் அவரை நாங்கள் ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது; ஒரு போதகருடன் கை குலுக்குவதனாலோ, அல்லது சில பிரமாணங்களை ஆதரிப்பதாக கையொப்பமிடுவதனாலோ, அல்லது ஒரு ஆண்டில் இத்தனை நாட்கள் நாங்கள் ஞாயிறு பள்ளிக்கு வருவோம் என்று வாக்குறுதி அளிப்பதனாலோ, அவரை நாங்கள் ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது. அவருடைய வார்த்தையில் மாத்திரமே நாங்கள் அவரைக் கண்டுகொள்ள முடியும். ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள இந்த நாளிலே அவர் மறுபடியும் வெளியே தள்ளப்பட்டு, பாளயத்துக்குப் புறம்போயிருப்பார் என்று நாங்கள் அறியும் போது, நாங்கள் பாளயத்துக்குப் புறம்பே சென்று அவருடைய நிந்தையைச் சுமந்தவர்களாய். உலகத்தாரால் பகைக்கப்பட்டு, ஆனால் அவருடைய பாளயத்துக்கு எங்களை வரவேற்கும் அந்த ஒருவரால் நாங்கள் சிநேகிக்கப்பட அருள்புரியும், ஆண்டவரே. 82இங்குள்ளவர்களில் யாராகிலும் அவரை அறிந்து கொள்ளாமலிருந்து, ஸ்தாபன தொடர்பு என்னும் பாளயத்துக்கு புறம்பே வராமலிருந்து, அதே சமயத்தில் தங்களைக் கிறிஸ்தவர்களாக பாவித்துக் கொண்டிருப்பார்களானால்... “அது வேறொரு நாளுக்குரியது என்று கூறுவீர்களானால், அது பரிசுத்த ஆவியல்ல என்பதைக் காண்பிக்கிறது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனிதன் எவ்வாறு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற முடியும்?'' ''வானத்திலிருந்து ஒருதூதன் வந்தாலும்...” என்று பவுல் கூறியிருக்கிறானே. ஒருக்கால் அதன் வித்தியாசத்தை நீங்கள் அறியாதவர்களாய், ஒருமுறை அவ்விதம் செய்திருக்கலாம். அப்போஸ்தலர் 19ல் காணப்படுகிறவர்களும் கூட அந்த வித்தியாசத்தை அறிந்திருக்கவில்லை. “வானத்திலிருந்து வந்த தூதனும் கூட வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று பவுல் கூறியுள்ளான். பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகம் என்னும் வாக்குத்தத்தம் உங்களுக்குள்ளது என்று வேதம் கூறியிருக்க, பிரமாணங்கள், தத்துவங்கள், அல்லது மற்றவைகளை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? தேவனுடைய வார்த்தையை எழுதிய அதே பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு உங்களுக்குள் வாசம் செய்து, அதே சமயத்தில் வார்த்தையை மறுதலிக்க முடியும்? “இதனுடன் எவனாவது ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது குறைத்தால் அவனுடைய பங்கை நான் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுவேன்” என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்திருக்க, அவர் எவ்வாறு தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வார்த்தையிலிருந்து ஒன்றை எடுத்துப் போடவோ அல்லது கூட்டவோ முடியும்? 83என் நண்பனே, இங்குள்ளவர்களும், இந்த ஒலிநாடாக்கள் செல்லும் இடங்களில் உள்ள காணக்கூடாதவர்களும் - இன்று காலையில் அளிக்கப்பட்ட செய்தி உங்கள் இருதயங்களில் ஆழமாய் பதியட்டும். நாம் எங்கிருக்கிறோம் என்று அறிந்தவர்களாய்... சற்றுமுன்பு நான் பேசின, அந்த மருந்துச் சீட்டிலுள்ள மருந்தை நீங்கள் இதுவரை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால், இப்பொழுதே நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா? உங்களுக்கு உதவி செய்ய எங்களால் இயன்ற அனைத்தையும் செய்யக் காத்திருக்கிறோம். நான் ஒரு சாட்சி மாத்திரமே; தேர்தலில் ஒருவருக்காக நான் ஓட்டு கேட்பவன் - இப்பொழுது லூயிவில்லில் ஜனநாயக கன்வென்ஷன் நடப்பது போன்று. தங்கள் மனிதன் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமென்று அவர்கள் மேடையைக் கட்டுகின்றனர். நானும் என் ஆண்டவருக்காக மேடையைக் கட்டுகிறேன். உங்களுக்குச் சொந்தமானவராக இன்றிரவு அவரை ஏற்றுக்கொள்ளவீர்களா? 84நம்முடைய தலைகளும், இருதயங்களும் இந்நேரத்தில் வணங்கிய வண்ணம் இருக்க, உங்கள் கரங்களையுயர்த்தி தேவனிடம், என்னிடமல்ல நான் ஒரு மனிதன், உங்கள் கரங்களை தேவனிடத்தில் உயர்த்தி, “தேவனே என் மீது இரக்கமாயிரும் இன்று கேட்ட எல்லாவற்றையும் நான் உண்மையாக விரும்புகிறேன். நான் பாளயத்துக்குப் புறம்பே செல்ல விரும்புகிறேன். மற்றவர் என்ன கூறினாலும் கவலையில்லை” என்பீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! எத்தனை கரங்கள், எத்தனை கரங்கள்! “நான் பாளயத்துக்குப் புறம்பே செல்ல விரும்புகிறேன். அதனால் என்ன நேர்ந்தாலும், என் சிலுவையை நான் தினமும் சுமப்பேன். நான் பாளயத்துக்குப் புறம்பே செல்வேன். ஜனங்கள் என்னைக் குறித்து என்ன கூறினாலும் பரவாயில்லை பாளயத்துக்குப் புறம்பே அவரைப் பின்பற்ற விரும்புகிறேன். நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்.” 85பரம பிதாவே, கரங்களை நீர் கண்டீர், நூறு பேராவது இக்கட்டிடத்தில் கரங்களையுயர்த்தியிருப்பார்கள். அவர்களுக்கு அருகாமையில் யாரோ ஒருவர்... கிறிஸ்து என்னும் நபர் - அவர்கள் மாமிசக் கண்களுக்கு காணக்கூடாதவராய் நின்று கொண்டு, அவர்கள் அந்த தீர்மானம் எடுக்கக் காரணமாயிருந்தார். தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று இழக்கப்பட்டுள்ளது என்பதை நிலைக் கண்ணாடியில் காணும் விதமாய் அவர்கள் அறிந்திருக்கின்றனர். தேவனுடைய வாக்குத்தத்தத்திற் கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். ஆழ்ந்த உத்தமத்துடன் அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். ஆண்டவரே, ஆட்டுத் தொழுவத்திற்கு செல்லும் அந்த மகத்தான வாசலுக்கு இன்றிரவு அவர்களை வழி நடத்தி உதவி செய்வீராக! அவர்கள் இனிமையாகவும், தாழ்மையுள்ளவர்களாகவும் வருவார்களாக! ஆண்டவரே, அவர்கள் உம்முடையவர்கள். அவர்களுடன் இடைப்படும். 86இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று கிரியை செய்யாமல், அவர்கள் தீர்மானம் செய்து கரங்களை உயர்த்தியிருக்க முடியாது. அங்கு எங்கோ ஜீவன் உள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. ஏனெனில் விஞ்ஞானப் பிரகாரமாய் நோக்கும் போது, புவி ஈர்ப்பு சக்தி கைகளை கீழே இழுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சிந்தையை ஏதோ ஒன்று தாக்கி, அதன் விளைவாக அவர்கள் புவி ஈர்ப்பு சக்தியையும் மேற்கொண்டு அவர்களை இங்கு கொண்டு வந்த சிருஷ்டி கர்த்தரை நோக்கி தங்கள் கரங்களை உயர்த்தச் செய்துள்ளது. “ஆம் நான் வழி நெடுக செல்ல விரும்புகிறேன். இன்றிரவு நான் பாளயத்திற்கு புறம்பே செல்ல விரும்புகிறேன்.” ஆண்டவரே, மனந்திரும்பினவுடனே அவர்கள் செய்ய வேண்டிய முதல் செயலுக்காக தண்ணீர் குளம் ஆயத்தமாயுள்ளது ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்கள், என்னும் வாக்குத்தத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கடைசி நாட்களில் மூல விசுவாசத்திற்கு - மூல மருந்துக்கு - மறுபடியும் வர அழைப்பு விடுக்கப்படுகின்றது. மனிதனால் கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக அநேகர் கிறிஸ்துவை விட்டு அதிக தூரம் சென்று மரித்துப் போயிருப்பதைக் காண்கிறோம். அவர்களுடைய ஸ்தாபனங்களில் அவர்கள் நல்லவர்களாகவே இருந்து வந்திருக்கலாம். ஆனால் ஆண்டவரே, உமது மருந்துச் சீட்டிலுள்ள மருந்துதான் எனக்கு தேவை. நீரே எங்கள் வைத்தியர். நமக்கு ஒரு வைத்தியர் இருக்கின்றார். கீலேயாத்தில் பிசின் தைலம் உள்ளது. பாவத்தால் வியாதிப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவை சுகப்படுத்தவும், சரீரப்பிரகாரமான வியாதியை சுகப்படுத்தவும் இன்றிரவு ஒரு வைத்தியர் இங்கிருக்கின்றார். சதாகாலங்களிலுமுள்ள மகத்தான வைத்தியரே, வானத்தையும், பூமியையும் படைத்த மகத்தான சிருஷ்டிகரே, இப்பொழுது எங்கள் மத்தியில் வந்து எங்களுடன் பேசும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 87''கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுது எனக்குதவி செய்யும்!'' என்று ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களில் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது... நீங்கள் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று முழு நிச்சயமாக நம்பினால் - நான் ஞானஸ்நானத்தைக் குறித்து இன்று பிரசங்கிக்கவில்லை - நீங்கள் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று முழு நிச்சயமாக நம்பினால், எந்தக் கிறிஸ்தவனும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரே விதம்... நீங்கள் வேறுவிதமாக ஞானஸ்நானம் பெற்றிருந்தால், ''ஒரு வார்த்தையைக் கூட்டினாலும், குறைத்தாலும் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவன் பங்கு எடுத்துப் போடப்படும்'' என்று இயேசு கூறியுள்ளார். அவர் மேலும், ''வேத வாக்கியங்களெல்லாம், தேவ ஆவியினால் அருளப்பட்டுள்ளது. அவை நிறைவேற வேண்டும்'' என்றும் கூறியுள்ளார். நீங்கள் வித்தியாசமாக அறிந்திருந்தால் அதைக் குறித்து என்ன செய்யப் போகின்றீர்கள்? 88நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு மாத்திரம் இருந்தால்... நானும் உணர்ச்சி வசப்படுவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆவியில் நடனமாடி அந்நிய பாஷை மாத்திரம் பேசியிருந்தால்... அதையும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் அத்தனை தூரம் மாத்திரம் சென்றிருந்து, உங்களுக்குள்ளிருக்கும் ஆவி தேவனுடைய வார்த்தையை பின்பற்ற வேண்டாம் என்று கூறுமானால், உங்கள் ஆவியில் ஏதோ தவறுண்டு. அது பரிசுத்த ஆவியல்ல. அது பரிசுத்த ஆவியாயிருக்க முடியாது. பாருங்கள்? தன் சொந்த வார்த்தையுடன் அது தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும். அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நாங்கள் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, நீங்கள் வர ஆயத்தமாகலாம். நசரேயனாகிய இயேசுவே, இப்பொழுது நீர் அருகாமையில் வந்து, ஒவ்வொரு இருதயத்தோடும் பேசுவீராக. அவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன். இந்த கரங்கள் யாவும் உமது செய்திக்கும், உமக்கும், உமது பிரசன்னத்துக்கும் கிடைக்கப் பெற்ற பரிசுகள். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்துக்கும் நுட்பமாக கிரகித்துக் கொள்ளக்கூடிய எவரும், உமது மகத்தான பரிசுத்தத்தை உணர்ந்தவர்களாய், நீர் இங்கிருக்கிறீர் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆண்டவரே, இதை அருள் புரியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். நமது தலைகள் வணங்கியிருக்க, 89எந்த மனிதனாவது மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்பினால், எனது இடது பாகத்தில் ஒரு அறை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு வலது பாகத்தில். உங்களுக்கு போதிக்க அங்கு யாராவது இருப்பார்கள். ஞானஸ்நான உடைகள் எல்லாமே அங்கு காத்திருக்கின்றன. நாம் தலை குனிந்து பாடும் போது. என் இரட்சகர் என்னை அழைப்பதைக் கேட்கிறேன்.